ஸ்மார்ட் பள்ளிகள் திட்டம் மத்திய நகர்ப்புற விவகாரத்துறை குழு மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு: தலைமையாசியர்களிடம் கருத்து கேட்பு

சென்னை: ஸ்மார்ட் பள்ளிகள் திட்டம் தொடர்பாக மத்திய நகர்ப்புற விவகாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு செய்தனர். பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன் சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் பள்ளிகள் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இந்த திட்டத்தின்படி மண்டலத்திற்கு ஒரு பள்ளி வீதம் 15 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றம் செய்யப்பட  உள்ளன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ₹95.25 கோடி. இதில் ₹76.2 கோடியை பிரான்ஸ் மேம்பாட்டு முகமை அளிக்கும். மீதமுள்ள தொகை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். பள்ளி வளாகங்கள் அனைத்தும் இயற்கை சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றப்படும். சோலார் பேனல் மூலம் மின்சாரம் தயாரிக்கும்  வசதி ஏற்படுத்தப்படும். பள்ளிகளில் ேதாட்டம் மற்றும் கட்டிடங்களின் மாடிகளில் மாடித் தோட்டம் அமைக்கப்படும். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கேற்பு இருக்கும். அதிக அளவில் ஆய்வு கூடங்கள்  ஏற்படுத்தப்படும். இந்த  ஆய்வு கூடங்கள் அனைத்தும் சர்வதேச தரத்தில் இருக்கும். இரண்டாவது கட்டமாக மாணவர்களின் கற்றல் திறனை ேமம்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்படும். பல்வேறு தலைசிறந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை கொண்டு  தொழிற்கல்வி வழங்கப்படும்.

மூன்றாவது கட்டமாக ஆசிரியர்களுக்கான கற்றல் திறனை ேமம்படுத்துவதற்கான வசதிகள் மேம்படுத்தப்படும். அடுத்தகட்டமாக, மாணவர்களின் அனைத்து தகவல்களும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்படும். டேப் மூலம் கல்வி  கற்கும் வசதியும் ஏற்படுத்தப்படும். இருபாலர் பயிலும் பள்ளிகளில் ஆண் - பெண் விகிதத்தை சமமாக வைக்க வழிவகை செய்யப்படும். அதிக அளிவில் கல்வி தொடர்பான கலந்தாய்வு கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும். இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தேசிய நகர்ப்புற விவகார துறை நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் அடங்கிய குழு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் விரிவான ஆய்வு மேற்கொண்டது.இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சாம்சங் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை அந்த குழு பார்வையிட்டது. இதை தொடர்ந்து, சென்னை ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி ராஜ் சொரூபல்,  செயற்பொறியாளர் பாபு மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். இதில் ஸ்மார்ட் பள்ளி  திட்டத்தின் கீழ் எந்த மாதிரியான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக தலைமையாசியர்களிடம்  கருத்துகளை கேட்டறிந்தனர்.

Related Stories: