இன்ஜினியரிங் கவுன்சலிங் இன்று தொடக்கம்

சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் இன்று தொடங்குகிறது. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் இன்று நடக்கிறது. பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடத்த 1 லட்சத்து 72 ஆயிரம் இடங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்காக 1 லட்சத்து 33 ஆயிரம் பேர்  விண்ணப்பித்து சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்டனர். இவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் தகுதி பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதையடுத்து, இன்று சிறப்பு பிரிவினருக்கான நேரடி கவுன்சலிங் தொடங்குகிறது.  

தொடர்ந்து, தொழிற்கல்வி  பிரிவினருக்கும் பின்னர் பொதுப் பிரிவுக்கும் கவுன்சலிங் நடக்கும். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கவுன்சலிங்கை நடத்துகிறது. சிறப்பு பிரிவினருக்கான  நேரடி கவுன்சலிங் இன்று தொடங்கி 27ம் தேதி வரை சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. முதல்நாளான இன்று மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கின்றனர். 26ம் தேதி முன்னாள்  ராணுவத்தினரின் வாரிசுகள், 27ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங்கும் நடக்கிறது. தொழிற்பாட பிரிவினருக்கான கவுன்சலிங் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும். பின்னர் பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கவுன்சலிங்  ஜூலை 3ம் தேதி தொடங்கும்.

Related Stories: