சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 28ம்தேதி தொடங்கும் நிலையில் முதல்வர் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை: மானிய கோரிக்கையின்போது புதிய அறிவிப்புகள் வருமா?

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 28ம் தேதி தொடங்க உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அப்போது, பேரவை  கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.தமிழக அரசின் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 8ம்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, 11ம்தேதி முதல் 14ம்தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, துறை  ரீதியான மானியக் கோரிக்கை கூட்டம் வழக்கமாக ஒரு மாதம் நடைபெறும். ஆனால் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல், மக்களவை தேர்தலையொட்டி மானியக் கோரிக்கை கூட்டம் நடைபெறவில்லை.தேர்தல் முடிந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 28ம்தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடந்த வாரம் அறிவித்தார். 28ம்தேதி கூடும் முதல் நாள் கூட்டத்தில் மறைந்த அதிமுக  உறுப்பினர் சூலூர் கனகராஜ் மற்றும் விக்கிரவாண்டி தொகுதி திமுக உறுப்பினர் ராதாமணி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

மீண்டும் கூட்டம் ஜூலை 1ம்தேதி தொடங்கி ஜூலை மாதம் 30ம்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று காலை 10.10 மணிக்கு சென்னை, தலைமை  செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 30 அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், அமைச்சரவை கூட்டத்தில் நடந்த விவாதங்கள் குறித்து தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கொண்டு வரக்கூடிய புதிய சட்ட மசோதாக்கள் மற்றும் தற்போதுள்ள சட்ட  மசோதாக்களில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் இது தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அவரின் ஒப்புதலின் பேரில் சட்டப்பேரவை  கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மேலும், இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் சில புதிய அறிவிப்புகளை 110வது விதியின் கீழ் வெளியிட உள்ளார்.

இதுகுறித்தும், தமிழகத்தில் தற்போதுள்ள சில தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கான அனுமதியும் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது” என்றார்.

Related Stories: