கட்டி முடித்த 3 ஆண்டுகளில் விரிசல் மழைநீரை சேமிக்க நேமம் நீர்த்தேக்கம் சீரமைக்கப்படுமா?

சென்னை: சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க ₹79.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நேமம் ஏரி நீர்த்தேக்கம், முற்றிலும் வறண்டு பாளம்பாளமாக வெடிப்பு ஏற்பட்டு காட்சியளிக்கிறது. முழுமையாக மழைநீரை சேமிக்கும்  வகையில், அணைக்கட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாக சுத்திகரிக்கப்பட்டு, சென்னை நகர  மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. பெரும்பாலும் சென்னையின் குடிநீர் தேவையை, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களின் நீர் ஆதாரங்களே பூர்த்தி செய்து வருகின்றன. சென்னை மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 90 கோடி  லிட்டருக்கு மேல் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், சென்னை குடிநீர் வாரியத்தால் இன்றைய நிலையில் தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது.

குடிநீர் பற்றாக்குறை ஒரு பக்கம் இருப்பினும், சென்னை மாநகரின் மக்கள் தொகை நாள்தோறும் பெருகிக் கொண்டே இருக்கிறது. மாநகரின் தற்போதைய மக்கள் தொகை 82 லட்சத்தை தாண்டி விட்டது. எதிர்கால திட்டங்களாக தற்போது உள்ள  நீர்நிலைகளை சீர் செய்யவும், கொள்ளளவு நிலைகளை உயர்த்தவும் அரசு, பூந்தமல்லி அருகே உள்ள நேமம் ஏரியை சீர் செய்து, ஒரு டிஎம்சி., தண்ணீரை சேமிக்கும் வகையில் புதிய நீர்த்தேக்கம் அமைத்தது.நேமம் ஏரியை தூர்வாரி மதகுகள், சாலைகள் அமைத்து நீரை தேக்கி வைக்கவும், நீர்த்தேக்கம் அமைக்கவும் 2012-13ம் ஆண்டு தமிழக அரசு ₹79.50 கோடி நிதி ஒதுக்கியது. அதனை தொடர்ந்து பணிகள் நடந்தன. நீர்த்தேக்கம் கட்டி முடித்து, 3  ஆண்டுகள் ஆன நிலையில், ஏரியின் கரைகள், அதன் மீது அமைத்த சாலைகள் ஆங்காங்கே பெயர்ந்து சேதமாகி உள்ளது. ஏரி முற்றிலும் வறண்டு பாளம், பாளமாக வெடிப்புகள் ஏற்பட்டு காட்சியளிக்கிறது. அதோடு, உபரிநீரை வெளியேற்றும்  வகையில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. எனவே, மழைக்காலங்களில் ஏரியில் ஒரு டிஎம்சி., தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு திட்டம் வீணாகி உள்ளதோடு, அரசு  பணமும் ₹79.50 கோடி வீணாகும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.  பல கோடி ரூபாயில் திட்டங்களைத் தீட்டி மக்களுக்கு தேவையான நீர் ஆதாரங்களை பெருக்குவதாக, தமிழக அரசு காட்டிக்கொண்டாலும், இதுதான் இன்றைய உண்மை நிலை  என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

* பூந்தமல்லி அருகே உள்ள நேமம் ஏரியை சீர்செய்து, ஒரு டிஎம்சி., தண்ணீரை சேமிக்கும் வகையில் புதிய நீர்த்தேக்கத்தை அரசு அமைத்தது. இதற்காக ₹79.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

* நீர்த்தேக்கம் கட்டி முடித்து, 3 ஆண்டுகளான நிலையில், ஏரியின் கரை, அதன் மீது அமைத்த சாலை எல்லாம் பெயர்ந்து விட்டது. ஏரி முற்றிலும் வறண்டு பாளம்பாளமாக  வெடித்துக் கிடக்கிறது.

* அரசு திட்டம் வீணாகி உள்ளதோடு, அரசு பணமும் வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: