தண்ணீர் பற்றாக்குறையால் தடுமாறும் அரசு மருத்துவமனைகள்

* நோய்களை பரப்பும் கழிவறைகள்

* நோயாளிகள், உறவினர்கள் தவிப்பு

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் உள்நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பல அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சில முக்கிய  ஆபரேஷன்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆபரேஷன் நடக்கிறது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ெபாதுமக்கள் அன்றாடம் உணவு சமைப்பது, குளிப்பது என அத்தியாவசிய தேவைகளுக்கே தண்ணீர் எடுக்க பல கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.  இந்நிலையில் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் அரசு மருத்துவமனைகளையும் விட்டு வைக்கவில்லை. சென்னையை பொறுத்தவரை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, அரசு  மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவை முக்கிய அரசு மருத்துவமனைகளாக உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆந்திராவின் சித்தூர், கடப்பா, நெல்லூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள்  முக்கியமான அறுவை சிகிச்சைகளை செய்ய சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு படையெடுக்கின்றனர்.

இந்த மருத்துவமனைகளின் தண்ணீர் தேவைக்காக அதன் வளாகத்திலேயே போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து மருத்துவமனையின் எந்த வார்டுக்கு தண்ணீர் தேவைப்படுகிறதோ அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில்  இந்த தண்ணீரை சேமதித்து வைப்பது வழக்கம். இந்த மேல்நிலை நீர்தேக்க ெதாட்டிகளில் இருந்துதான் உள்நோயாளிகள், மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர்கள், கழிவறைகளுக்கு தண்ணீர் செல்ல வேண்டும். ஆனால் சென்னையில் மழைநீர்  சேகரிப்பில் அரசு கோட்டை விட்டதால் அவற்றிற்கும் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட போர்வெல்களில் தண்ணீர் வருவதில்லை. காரணம் வறட்சி மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகளவு ஆழ்துளை கிணறுகளை பல அடிக்கு கீழே கொண்டு சென்றுவிட்டது. இதனால் வணிக  நிறுவனங்களுக்கு போர்வெல்கள் மூலம் தாராளமாக தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் அரசு மருத்துவமனைகளின் போர்வெல்களில் தண்ணீர் எடுக்க முடியாத அளவுக்கு பல நூறு அடி ஆழத்துக்கு தண்ணீர் சென்றுவிட்டது. மீண்டும் போர் ெவல்லை பல நூறு மீட்டர் மீண்டும் ஆழத்துக்கு கொண்டு ெசல்ல வேண்டும். ஆனால் அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கவும் இல்லை. மருத்துவமனை நிர்வாகங்களை கண்டுகொள்ளவும் இல்லை. இதையடுத்து அரசு மருத்துவமனை  நிர்வாகங்கள் அரசுக்கும் சுகாதாரத்துறைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கோரிக்கை வைத்தன. இதனால் சுதாரித்த அரசு தண்ணீர் தட்டுப்பாட்டை தற்காலிகமாக சமாளிக்கும் வகையில் குடிநீர் வழங்கல் வாரிய லாரிகள் மூலம் தண்ணீர்  சப்ளை செய்து வருகிறது.  ஆனால் மருத்துவமனையை விட பொதுமக்களின் தேவைக்கும், அவர்களின் ஆர்ப்பாட்டம், போராட்டதை சமாளிக்கும் வகையில் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய தண்ணீரை கூட பொதுமக்களுக்கு அனுப்பி  விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குடிநீர் வழங்கல் வாரியம் லாரிகள் மூலம் சப்ளை செய்யும் தண்ணீரின் அளவை குறைத்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேரடியாக  பாதிக்கப்படக்கூடியவர்கள் நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் தான்.

 அரசு மருத்துவமனைகளில் மருத்துவக்கல்லூரி டீன் அறை, ஆர்எம்ஓ அறை, பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு அறைகளில் தங்கு தடையின்றி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் நோயாளிகளின் வார்டுகளில் தண்ணீர் விநியோகம்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ராஜிவ் காந்தி அரசு மருத்துமவனைகளில் தண்ணீரின்றி நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் பயன்படுத்தும் கழிவறைகள் பூட்டப்பட்டது சில நாட்களுக்கு முன் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது தண்ணீர் விநியோகம்  நிறுத்தப்படவில்லை, குறிப்பிட்ட கழிவறைகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் அவை பூட்டப்பட்டுள்ளதாகவும், தண்ணீர் தட்டுப்பாடு இல்லை எனவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். எழும்பூர் மகப்பேறு சிகிச்சை மருத்துவமனையில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத தண்ணீர் பிரச்னை உள்ளது. அங்கு சிகிச்சைக்காக சேரும் பெண்களின் குடும்பத்தினர் தான், குடிப்பது, கழிவறையில் பயன்படுத்துவதற்கான தண்ணீரை கொண்டு  வர வேண்டும் என்ற நிலை உள்ளது.  அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் பிரச்னையால் பெரும்பாலான கழிவறைகளில் தண்ணீர் வருவதில்லை. குறிப்பிட்ட சில கழிவறைகளில் மட்டுமே தண்ணீர் வருகிறது. அந்த கழிவறைகளுக்கு  முன்னால், நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது. அதிலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஒரு நோய்க்காக சிகிச்சைக்கு சென்று மற்றொரு நோயை மருத்துவமனை கழிவறையில் இருந்து வாங்கி வரும் நிலைதான்  காணப்படுகிறது.

அதிலும் நோயாளியுடன் தங்கியிருக்கும் நபர் அல்லது குடும்பத்தினர் குறிப்பிட்ட கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் தங்கள் இயற்கை உபாதைகளை தணிக்க அருகில் உள்ள சென்னை ெசன்ட்ரல் ரயில் நிலையம்,  தனியார் கழிவறைகள், மேன்ஷன்கள், லாட்ஜ்களில் உள்ள கழிவறைகளை பணம் கொடுத்து பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோஷா அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உறவினர்களில் பலர் அதிகாலையிலேயே மெரினாவிற்கு செல்லும் அவலநிலை காணப்படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது நோயாளிகளின் குடும்பத்தினர் தான். பலர் இந்த  பிரச்னையால் அரசு மருத்துவமனையை தவிர்த்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்கிறார்கள். இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

தனியார் மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு வசதி இல்லாத ஏழைகள் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அப்படியிருக்கையில் சுகாதாரத்துறை சார்பில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து நோயை குணமாக்க  வேண்டும். முறையாக அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியது அரசின் கடமை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் அரசின் சுகாதாரத்துறையின் மீதான நம்பகத்தன்மை மேலும் குறையும். அதனால் அரசு மருத்துவமனைகளில் தடையின்றி  தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய ேவண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

பல அரசு மருத்துவமனைகளில் தண்ணீர்

பற்றாக்குறை காரணமாக சில முக்கிய ஆபரேஷன்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆபரேஷன் நடக்கிறது.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரி டீன் அறை, ஆர்எம்ஓ அறை,

பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு அறைகளில் தங்கு தடையின்றி தண்ணீர்  விநியோகிக்கப்படுகிறது. ஆனால் நோயாளிகளின் வார்டுகளில் தண்ணீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: