கார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி யுத்த காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டிய விமானப்படை: குவாலியர் தளத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சி

குவாலியர்: கார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, குவாலியர் விமானப்படை தளத்தில் நடந்த சாகச நிகழ்ச்சியில் யுத்த காட்சிகளை தத்ரூபமாக நடத்திக் காட்டி விமானப்படை வீரர்கள் அசத்தினர். கடந்த 1999ம் ஆண்டு இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் கார்கில் பகுதியை முற்றுகையிட்டது. பாகிஸ்தான் பிடியிலிருந்து கார்கிலை மீட்பதற்காக நடத்தப்பட்ட போரில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது. இப்போர் 1999ம் ஆண்டு மே 3ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடந்தது. இதை நினைவு கூறும் விதமாக, நாடு முழுவதும் உள்ள விமானப்படை தளங்களில் கார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள விமானப்படை தளத்தில் நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில், யுத்த காட்சிகளை விமானப்படை வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர்.

Advertising
Advertising

கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட மிராஜ் 2000 மற்றும் மிக் 21, சுகோய் 30 ரக விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டன. கார்கில் வெற்றிக்கு மிராஜ் 2000 விமானத்தின் பங்கு முக்கியமானதாகும். ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இப்போரில் டைகர் மலையை பாகிஸ்தானிடமிருந்து மீட்டு தேசியக் கொடியை நமது வீரர்கள் நிலை நிறுத்திய உணர்வுப்பூர்வமான தருணத்தை விமானப்படை வீரர்கள் சிறப்பாக செய்து காட்டினர். இதற்காக, இந்திய விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் விமானப்படை தலைமை தளபதி தனோவா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

‘ஆபரேஷன் விஜய்’யில் விருது வாங்கிய வீரர்கள், ஓய்வு பெற்ற வீரர்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். ‘‘கார்கில் போரானது மிக சிரமமான மலைப்பகுதியில் போரிடும் மகத்தான அனுபவத்தை தந்ததுடன், இந்திய விமானப்படையின் வீரத்தையும் உலகிற்கு பறைசாற்றியது’’ என விமானப்படை அதிகாரிகள் பெருமிதம் தெரிவித்தனர். இதே போல, அடுத்த மாதம் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ராணுவ தளங்களில் கார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதன் முக்கிய நிகழ்ச்சி டெல்லியில் ஜூலை 25 முதல் 27ம் தேதி வரை நடக்க உள்ளது.

12 நாளில் மிராஜ்ஜை நவீனமாக்கி சாதனை

நிகழ்ச்சியில் பேசிய விமானப்படை தலைமை தளபதி தனோவா, ‘‘கார்கில் போருக்காக மிராஜ் 2000 ரக விமானம் நவீனப்படுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டது. அந்த விமானத்தில் இலக்குகளை குறிவைக்கும் கருவிகள் மற்றும் லேசர் குண்டுகளை பொருத்தும் பணி வெறும் 12 நாளில் ஒருங்கிணைத்து சாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஒருபோதும் நமது வான்வெளியில் அத்துமீற முடியாது. அவர்களின் எல்லையில் இருந்த ராணுவ முகாம்களை நாம் அழித்துள்ளோம்.

ஆனால், நமது ராணுவ முகாம்களை குறிவைத்து அவர்கள் வைத்த இலக்கு முறியடிக்கப்பட்டது’’ என்றார். சமீபத்தில் அருணாச்சலில் ஐஏஎப் ஏஎன்-32 சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகி 13 பேர் பலியாகினர். இது குறித்து தனோவா கூறுகையில், ‘‘மலைப்பகுதிகளில் சரக்கு போக்குவரத்திற்கு ஐஏஎப் ஏஎன்-32 விமானம் தொடர்ந்து பயன்படுத்தப்படும். நவீன சரக்கு விமானம் பெறப்பட்ட பிறகு, ஏஎன்-32 சேவை நிறுத்தப்படும்’’ என்றார்.

Related Stories: