பார்சல் கம்பெனி உரிமையாளருக்கு துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல்: டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

பூந்தமல்லி: பார்சல் கம்பெனி உரிமையாளர் கழுத்தில் துப்பாக்கி வைத்து கொலை மிரட்டல் விடுத்த டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே செந்நீர்குப்பத்தை சேர்ந்தவர் குல்பிப்சிங் (34). இவர் அதே பகுதியில் பார்சல் சர்வீஸ் கம்பெனி நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சுனில்குமார் (22) என்பவர் அப்பகுதியில் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு பார்சல் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட பார்சல்களில் 2 பார்சல்கள் மாயமானது. இதனால் பார்சல் எடுத்து செல்லும் கட்டணம் 7 ஆயிரம் ரூபாயை கொடுக்காமல் குல்பிப்சிங் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் குல்பிப்சிங்குக்கும், சுனில்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி இரவு சுனில்குமார் உட்பட 3 பேர் பார்சல் சர்வீஸ் நிறுவனத்துக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த குல்பிப்சிங் கழுத்தின் மீது கைத் துப்பாக்கியை வைத்து “பணம் தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன்” என்று மிரட்டியுள்ளனர். இதனால் குல்பிப்சிங் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் குல்பிப்சிங் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து சுனில்குமார் உட்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைதுப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Related Stories: