பேச்சுரிமைக்கு வரம்பு இல்லையா? இயக்குநர் ரஞ்சித்துக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்

மதுரை: தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் நடந்த பொதுக்கூட்டத்தில் மன்னர் ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிந்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி ரஞ்சித், ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார்.  இந்த மனு கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘ரஞ்சித்தை கைது செய்ய மாட்டோம்’ என போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. மீண்டும் இவ்வழக்கு கடந்த 21ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கைது செய்யமாட்ேடாம் என்ற போலீசாரின் உத்தரவாதத்தை நீதிபதி நீட்டிக்க மறுத்து விசாரணையை ஜூன் 24க்கு தள்ளி வைத்தார்.அதன்படி இந்த மனு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், தலைமை குற்றவியல் வக்கீல் ஆஜராக வேண்டியிருப்பதால்,  கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதையடுத்து மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, திருப்பனந்தாள் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ரஞ்சித் மேலும் ஒரு மனு செய்திருந்தார்.

அந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜராகி, ‘‘வரலாறு மற்றும் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையிலேயே பேசினார். ஜூன் 6ல் நடந்த நிகழ்ச்சிக்கு ஜூன் 11ல் தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை அடிப்படையில் தான் மனுதாரர் பேசினார்’’ என்றார்.

 அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘பேச்சுரிமை என்றாலும், அதற்கு வரம்பு இல்லையா? பிரச்னைக்குரிய வகையில் எதையும் பேசலாமா? ராஜராஜசோழன் குறிப்பிட்ட சமூகத்தினரின் நிலங்களை பறித்துக் கொண்டார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? எந்த நோக்கத்தில் அப்படி பேசினார்? அப்போதிருந்த பல நடைமுறைகள், இப்போதும் உள்ளதே? ஏன் இப்படி பேச வேண்டும்?’’ என்றார். பின்னர், மனுதாரர் பேசியது தொடர்பான முழு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை, அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 8க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: