தென்மேற்கு பருவகாற்று தீவிரம் தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி உயர்வு

நெல்லை:  தமிழகத்தில் நாள்தோறும் 15 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமாக மின்நுகர்வு உள்ளது. இந்தாண்டு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நீண்ட கோடையை தமிழகம் சந்தித்து வருகிறது.   இதனால் 24 மணி நேரமும் ஏசி, ஏர்கூலர் உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் வரை உயர்ந்துள்ளது.இந்நிலையில் நீர் மின் உற்பத்தியும், காற்றாலை மின் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்தது. இதன் காரணமாக மின் பற்றாக்குறை கடுமையாக அதிகரித்தது. தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கியும் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால்  அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது.. இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக தென்மேற்கு பருவகாற்று வீச தொடங்கியது. காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் காற்றாலை மின் உற்பத்தியும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் மூலம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 7,913 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. இதனிடையே கடந்த ஒரு வாரமாக 2 ஆயிரம் மெகாவாட்டுக்கும் மேலாக காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைத்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 3,473 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. சராசரி காற்றாலை மின் உற்பத்தி 2 ஆயிரத்து 718 மெகாவாட்டாக காணப்பட்டது. தொடர்ந்து அடுத்த 2 மாதங்களுக்கு காற்றின் சீசன் நீடிக்கும் என்பதால் அதுவரை காற்றாலை மின்உற்பத்தி அதிகளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் காற்றாலை மின் உற்பத்தி மேலும் உயர்ந்தால் அதனை மின்வாரியம் முழுமையாக கொள்முதல் செய்யவேண்டும் என காற்றாலை நிறுவனத்தினர் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: