குமரி மாவட்டம் பறக்கை பகுதியில் 1,000 ஏக்கர் நெற்பயிர் கருகுகிறது: குளங்கள் வறண்டன, அணையும் திறக்கப்படவில்லை,.. விவசாயிகள் வேதனை

நாகர்கோவில்: அணைகள் திறக்கப்படுவது தாமதம் ஆகி வரும் நிலையில் குமரி மாவட்டம் பறக்கை குளத்து பாசன பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக ஜூன் 1ம் தேதி அணைகள் திறக்கப்படுவது வழக்கம். சில வேளையில் ஜூன் முதல் வாரத்திலாவது அணைகள் திறக்கப்படுவது உண்டு. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அணையில் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டும் இதுவரை அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட வில்ைல. மேலும் பாசன அணைகள் நான்கிலும்  சேர்த்து 1500 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தால் மட்டுமே பாசனத்திற்கு அணைகள் திறக்கப்படுவது வழக்கம். தற்போது அந்த அளவு தண்ணீர் இல்லை.

இந்தநிலையில் அணை திறக்கப்படும் என்று எதிர்பார்த்தும், மழையை நம்பியும் முன்கூட்டியே சாகுபடி செய்துள்ள குளத்து பாசன விவசாயிகள் தற்போது குளங்களில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகுவதை கண்டு வேதனை அடைந்துள்ளனர். அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகா பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.  அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் குளங்களில் நிரம்பி அதன் வழியாக பாசனம் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் இருந்தது. ஆனால் அவ்வாறு நடைபெறாததால் நெற்பயிர்கள் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு கருகி வருகின்றன. ஒரு சில விவசாயிகள் வயல்களில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதனால் மிகப்ெபரிய நஷ்டம்தான், பயிர்கள் கருகாமல் இருக்க இதனை செய்கிறோம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். இருப்பினும் ஒரு சில வயல்களையே இவ்வாறு காப்பாற்ற முடிகிறது.

இதனால் அணையில் இருந்து உடனே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பறக்கை வலிக்கொலி அம்மன் குளப்புரவு விவசாயிகள் சங்கத்தினர் குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து நேற்று மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: அகஸ்தீஸ்வரம் தாலுகாவுக்கு உட்பட்ட பறக்கை குளம் சுமார் 1000 ஏக்கர் ஆயக்கட்டு உள்ள விளைநிலங்களுக்கு பாசன வசதியை வழங்கி வருகிறது. தற்போது நெல் பயிரிடப்பட்டு குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் கருகும் நிலையில் பயிர்கள் உள்ளன. எனவே அணைகளை உடனே திறந்து பறக்கை குளத்திற்கு முன்னுரிமை அளித்து குளத்தை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது விவசாயிகள் கருகிய பயிர்களையும் கலெக்டரிடம் காண்பிக்க எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: