×

அதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்டு மறியல் இலவச லேப்டாப் கேட்டு போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி: ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு: ஈரோட்டில் அதிமுக எம்எல்ஏக்களிடம் இலவச லேப்டாப் கேட்டு போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் சென்ற இடங்களில்  எல்லாம் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.  தமிழக அரசின் சார்பில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2017-18ம்ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று ஈரோடு வீரப்பன்சத்திரம் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இதையறிந்து கடந்த ஆண்டு பிளஸ்2 படித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கும் லேப்டாப் வழங்க வலியுறுத்தி அந்த பள்ளிக்கு வந்தனர்.

பல்வேறு பகுதிகளில் நடந்த லேப்டாப் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விட்டு ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தென்னரசு, ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராமலிங்கம் ஆகியோர் மதியம் 12 மணிக்கு அங்கு வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களுக்கு இதுவரை லேப்டாப் வழங்காதது குறித்து முறையிட்டனர். ஆனால் அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் வீரப்பன்சத்திரம் பள்ளி அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். விழா முடிந்து புறப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு, ராமலிங்கம் ஆகியோரது கார்கள் முன்பு அமர்ந்து அவர்களை செல்ல விடாமல் தடுத்தனர். எம்.எல்.ஏ.,தென்னரசு ‘ எதிர்கட்சியினர் தூண்டிவிட்டு தான் மாணவர்கள் இதுபோல போராட்டம்’ நடத்துகிறீர்கள் என்றார். ஆனால் மாணவர்கள் யாரும் எங்களை தூண்டிவிடவில்லை.

எங்களுக்கு உரிய லேப்டாப்களை வழங்கி விட்டு செல்லுங்கள் என்றனர்.  போலீசார் மாணவ, மாணவிகளை அப்புறப்படுத்திய பிறகு எம்எல்ஏ.,க்கள் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து ரோட்டிற்கு வந்த மாணவர்கள் சாலை மறியல்  செய்தனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற சிலர் தலை மற்றும் கைகளில் கருப்பு துணியை அணிந்தபடி கோஷங்கள் எழுப்பினர்.  தகவலறிந்த ஈரோடு போக்குவரத்து டி.எஸ்.பி.,எட்டியப்பன் தலைமையிலான போலீசார் வந்து பேச்சு நடத்தினர். ஆனால் தங்களுக்கு லேப்டாப் கொடுத்தால் மட்டும் தான் கலைந்து செல்வோம் எனக்கூறி மறியலை தொடர்ந்தனர். அங்கு கட்டப்பட்டிருந்த அதிமுக கொடி கம்பங்களை பிடுங்கி எறிந்தனர்.  இதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வந்து பேச்சு நடத்தியும் பயனில்லை.இந்நிலையில் பகல் 2 மணியளவில் ஈரோடு டவுன் டி.எஸ்.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு  வந்தனர்.

போராட்டம் தொடரவே அங்கு அதிவிரைவுப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் மாணவ, மாணவிகள் மீது  திடீரென தடியடி நடத்தினர்.  இதனால் அவர்கள் சிதறி ஓடினர். மேலும் மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று மினிபஸ்சில் ஏற்றினர். அப்போது அங்கு நின்றிருந்த நபர் திடீரென சொம்பை எடுத்து பஸ் மீது வீசினார். இதை பார்த்த போலீசார் அந்த நபரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மாணவர்களை விடுவிக்க கோரி பெற்றோரும் மறியல் செய்ய முயற்சி செய்தபோது அவர்களையும் போலீசார் தடுத்து மினிபஸ்சில் ஏற்றினர். இதுதொடர்பாக 33 மாணவிகள், 27 மாணவர்கள் என 60 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் லேப்டாப் வழங்க எம்.எல்.ஏ.க்கள் சென்றனர். இதையறிந்த முன்னாள் மாணவ, மாணவிகள் கருங்கல்பாளையம் காந்திசிலை முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.  பின்னர் குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு லேப்டாப் கொடுக்க எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு, ராமலிங்கம் சென்றபோது அங்கும் மாணவர்கள் ெசன்று மறியல் போராட்டம் நடத்தினர். அடுத்தடுத்து நடந்த மறியல், முற்றுகை போராட்டத்தால் ஈரோட்டில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் கலெக்டர் ஆபீஸ் முன் மாணவ, மாணவிகள் மறியல்
மதுரை மங்கையர்க்கரசி பள்ளியில் 2017-18ம் கல்வியாண்டில் படித்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று 2ம் நாளாக லேப்டாப் கேட்டு, மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களுக்கு லேப்டாப் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்பு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தாசில்தார் செல்வராஜ், மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது அறிவுறுத்தலில், பின்னர் கோரிக்கை மனுவை கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாரிடம் மாணவர்கள் வழங்கினர்.

பள்ளி முற்றுகை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மட்டும் லேப்டாப்கள் வழங்கப்பட்டன. தகவலறிந்து கடந்த, முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 2 படித்த மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். இவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் பள்ளியின் எதிரே உசிலம்பட்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருமங்கலம் டவுன் போலீசாருடன், மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : AIADMK MLAs , AIADMK MLAs, Free Laptop, Students, Police, Staff, Erode
× RELATED 14 அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்...