×

காவிரி நதிநீர் பிரச்னை விவகாரம் இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையில் செயல்படுவதா? கர்நாடக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: “காவிரி நதிநீர் விவகாரத்தில் இரு மாநில உறவுகளை  பாதிக்கும் வகையில் செயல்படுவதா?” என்று கர்நாடக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும்,  காவிரி தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படியும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரைக் குறைக்கும் விதத்தில் எந்த அணைகளையும் கர்நாடக மாநில அரசு கட்டக் கூடாது என்று கூறியிருந்த போதிலும், “மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்” என்று தொடர்ந்து கர்நாடக அரசு, மனிதாபிமானம் சிறிதும் இன்றி வேண்டுமென்றே அடம் பிடித்து வருவதும்-அதற்கு திரைமறைவில் மத்திய பாஜ அரசு, அரசியல் காரணங்களுக்காக ஆதரவுக்கரம் நீட்டி வருவதும் கடும் கண்டனத்திற்குரியது.

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தபோது தமிழகம் கடுமையாக எதிர்த்தது. இந்நிலையில், கர்நாடக அரசின் சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுப்புறச்சூழல் அனுமதி கொடுங்கள் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது இரு மாநில நல்லுறவுக்கு எந்த வகையிலும் உதவிடாத ஒரு சட்ட விரோதச் செயலாகவே திமுக கருதுகிறது. ஆகவே  தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு மேகதாது அணை பிரச்னையில் இப்போதும் மெத்தனமாக இருக்காமல் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி, மேகதாது அணை கட்டுவதற்கு தாமதமின்றி தடை உத்தரவினை பெற்றிட வேண்டும்.

 காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட வேண்டிய கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டினால்தான் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கூறுவது  வேடிக்கையானது மட்டுமல்ல, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன்  விளையாடும் விபரீத முயற்சியாகும். ஆகவே மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவினை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், மத்தியில் உள்ள பாஜ அரசு கர்நாடக அரசின் கடிதத்தை நிராகரித்து, “மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுப்புறச் சூழல் அனுமதியைக் கொடுக்க முடியாது” என்று உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நீரைக்கூட திறந்து விடாமல், புதிய அணை கட்டினால் தான் தண்ணீர் திறந்து விட முடியும் என்று ஒரு அராஜக மனப்பான்மையுடன் கர்நாடக அரசு செயல்படுவது, அரசியல் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் துச்சமென மதிக்கும் செயல்.  காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடக அரசு,  இரு மாநில உறவுகளைப் பாதிக்கும் இத்தகைய முரண்பட்ட செயல்களையும், சட்ட விரோத நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : government ,Karnataka ,MK Stalin , Cauvery River Issue, Two State Relations, Government of Karnataka, MK Stalin
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...