வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வர வேண்டும்: திரிணாமுல் எம்.பி கோரிக்கை

புதுடெல்லி: ‘‘எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களை ஓரங்கட்டிவிட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறையை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்’’ என திரிணாமுல் எம்.பி சவுகதா ராய் மக்களவையில் கோரிக்கை விடுத்தார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஸ் அலி பேசுகையில், ‘‘மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியதற்கு பதில், எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திரம் குறித்து விவாதிக்க பிரதமர் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். பா.ஜ மீண்டும் ஆட்சிக்கு வர எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள் உதவின’’ என்றார் (அப்போது குறுக்கிட்ட பா.ஜ எம்.பி.க்கள், ‘‘அவர் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இதே ஓட்டு இயந்திரங்கள் மூலம் வெற்றி பெற்றதை சுட்டிக் காட்டி பதிலடி கொடுத்தனர்).

அதன்பின் பேசிய டேனிஸ் அலி, ‘‘தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ போன்ற கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நிதி கிடைத்தது. ஆனால் பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அளிக்கவில்லை’’ என்றார். இதையடுத்து திரிணாமுல் எம்.பி சவுகதா ராய் பேசுகையில், ‘‘ஜனாதிபதி உரையில் விவசாயிகளின் தற்கொலை, ரபேல் ஒப்பந்தம், காஷ்மீரில் நடக்கும் கொலைகள், வேலைவாய்ப்பின்மை, பத்திரிக்கை சுதந்திரத்தில் அரசு தலையீடு ஆகிய விஷயங்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முதல் நாள், பா.ஜ 300 இடங்களில் வெற்றி பெறும் என பா.ஜ தலைவர் கூறுகிறார். அதன்படியே 303 இடங்களில் பா.ஜ வென்றது. இது எப்படி சாத்தியமாகும்? எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தின் செல்பாடு மீது நம்பிக்கை இல்லை. எனவே, அவற்றை ஓரங்கட்டிவிட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறையை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

மாநிலங்களவை: மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய பா.ஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டா, ‘‘இந்த அரசு அனைவருக்குமான வளர்ச்சி மட்டும் அல்ல, அனைவரது நம்பிக்கையை பெறவும் விரும்புகிறது. அவை சுமூகமாக செயல்பட உங்கள் அனைவரது ஆதரவையும் கோருகிறேன். கடந்த காலங்களில் அவையில் பல இடையூறுகள் நடந்தன. இது எதிர்க்கட்சிகளைத்தான் கடுமையாக பாதித்தது. அடுத்த 5 ஆண்டுகளில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு மோடியின் 2வது அரசு பணியாற்றும்’’ என்றார்.  அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் பேசுகையில், ‘‘மக்களவை தேர்தல் 7  கட்டங்களாக நீண்ட நாட்கள் நடந்தது. இதுபோன்ற நடைமுறையை எதிர்காலத்தில்  தவிர்க்க வேண்டும். வாக்குச்சாவடி அளவில் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில்  முறைகேடு செய்ய முடியும் என ஒரு கட்சி பலமுறை நிருபித்து காட்டியுள்ளது.  

பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் கூட வாக்குச் சீட்டு முறையைதான்  பின்பற்றுகின்றன. அதனால் நாமும் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற  வேண்டும். மக்களவை தேர்தலையும், சட்டப்பேரவை தேர்தலையும் ஒரே நேரத்தில்  நடத்துவது நடைமுறைக்கு ஒத்துவராது என கூறப்படும்போது, இது எப்படி  சாத்தியம் என எனக்கு தெரியவில்லை. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை  மத்திய அரசு குறித்த நேரத்தில் தர வேண்டும். தமிழகத்துக்கு மத்திய அரசு பல  ஆயிரம் கோடி தர வேண்டியுள்ளது. உதை உடனடியாக வழங்க வேண்டும். இல்லை  என்றால் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்துவது பாதிக்கும்’’ என்றார்.

நிலுவை தொகை வழங்க வேண்டும்

மாநிலங்களவையில் அதிமுக எம்பி மைத்ரேயன் பேசுகையில், ‘‘தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். கஜா புயல் நிவாரண நிதி உட்பட மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் கோடியும், ஜிஎஸ்டியில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியும் தமிழகத்திற்கு நிதி வர வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: