கணக்கில் வராத இந்தியர்களின் கருப்பு பணம் 34.30 லட்சம் கோடி: ஆய்வறிக்கை தகவல்

புதுடெல்லி: இந்தியர்களின் கணக்கில் வராத சொத்துகள் மதிப்பு ஏறக்குறைய ரூ.34.30 லட்சம் கோடியாக உள்ளது என ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியர்கள் எவ்வளவு கருப்பு பணம் வைத்துள்ளனர் என்பதை ஆராய்வதற்கு பொதுநிதி மற்றும் கொள்கைகளுக்கான தேசிய நிறுவனம், தேசிய பயன்பாட்டிற்கான பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு, தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றைக் கொண்டு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2011ம் ஆண்டு கமிஷன் ஒன்றை நிறுவியது. இந்த மூன்று அமைப்புகளும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே 2013 டிசம்பர், 2014 ஜூலை, 2014 ஆகஸ்ட் மாதங்களில் 3 அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தன.

அவை நாடாளுமன்ற குழுவால் ஆய்வு செய்யப்பட்டு மக்களவை சபாநாயகருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் `இந்தியா, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் கணக்கில் வராத வருமானம் மற்றும் சொத்துகள்:

ஆய்வறிக்கை’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில் பின்வரும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.தேசிய பயன்பாட்டிற்கான பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு அறிக்கையில், கடந்த 1980 முதல் 2008ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், ரூ.26.88 லட்சம் கோடியில் இருந்து ரூ.34.30 லட்சம் கோடி மதிப்பிலான இந்தியர்களின் கணக்கில் வராத சொத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தேசிய நிதி மேலாண்மை நிறுவன அறிக்கையில், கடந்த 1990 முதல் 2008 வரையிலான ஆண்டுகளில் ரூ.15.12 லட்சம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, பொதுநிதி மற்றும் கொள்கைகளுக்கான தேசிய நிறுவன அறிக்கையில், 1997-2009 இடைப்பட்ட காலத்தில் தனிநபர் வருமானத்தில் 0.2 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதம் அளவு வரையிலான பணம் கணக்கில் வராமல் பதுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கணக்கில் வராத சொத்து, கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளையும், சிறப்பு புலானய்வு குழு அளித்துள்ள 7 அறிக்கைகளின் அடிப்படையில் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் மத்திய நிதி அமைச்சகத்தின் வருமான வரித்துறை தொடர வேண்டும் என மூன்று அமைப்புகளின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Related Stories: