×

மின்சார வாகனங்களுக்கு வரி குறைக்கப்படுமா? ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை

புதுடெல்லி: ‘‘மின்சார வாகனங்கள் மீதான வரியை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசித்து வருகிறது’’ என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இது அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்களவையில் கடும் அமளிக்கு இடையே முத்தலாக் மசோதா கடந்த 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பாஜ உறுப்பினர் வருண் காந்தி, ``மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுமா?’’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளிக்கையில், ``ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை கடந்தாண்டை விட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி நடைமுறையை எளிதாக்கியதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் உள்ளிட்ட வர்த்தகர்கள் ₹92 ஆயிரம் கோடி பயனடைந்துள்ளனர். கடந்த மாதத்தில் ஒரே நாளில் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி ரிட்டர்ன் படிவங்கள் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு ஏப்ரல், மே மாதங்களில் வரி செலுத்தியோரின் விகிதம் 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களுக்கு வரி குறைப்பதற்கான ஆலோசனை ஜிஎஸ்டி கவுன்சிலில் நிலுவையில் உள்ளது. விரைவில் இது குறித்த தகவல் தெரிவிக்கப்படும்’’ என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த 2018-19ம் ஆண்டில் நேரடி வரி விதிப்பின் கீழ் 11,37,685 கோடி வசூலிக்கப்பட்டது. ஜிடிபி விகிதத்துடன் ஒப்பிடுகையில் இது 5.86 சதவீதத்தில் இருந்து 5.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று கடந்தாண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் 5,81,563 கோடி கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி அல்லாத மறைமுக வரிவிதிப்பின் கீழ் 3,55,906 கோடி கிடைக்கபெற்றது’’ என்று கூறினார்.



Tags : GST Council , Electric Vehicles, Tax GST Council
× RELATED ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு;...