டிக்டாக் சாகசத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்

துமகூரு: டிக்டாக் செயலியில் வீடியோ பதிவிடுவதற்காக சாகசம் செய்தபோது தரையில் தவறி விழுந்ததில் முதுகெலும்பு உடைந்து சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடகாவின் கோடேகெரெ கிராமத்தைச் சேர்ந்தவர் முர்தண்ணா. இவரது மகன் குமார் (22). நடன கலைஞர் மற்றும் மேடை பாடகருமான இவர் டிக்டாக் செயலியில் வீடியோ பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். டிக்டாக் செயலியில் நடிப்பு, வசனம் பேசி அவர் பதிவிட்டிருந்த வீடியோவிற்கு அதிக லைக்குகள் கிடைத்துள்ளது.

இதனால் சாகசம் செய்து அந்த வீடியோவை டிக்டாக்கில் பதிவிட முடிவு செய்து வீடியோ எடுத்துள்ளார். அப்போது ஓடி வந்து கை மற்றும் கால்கள் தரையில் படாமல் எதிரில் இருந்த நண்பரின் கையில் தனது ஒரு காலை வைத்து பல்டி அடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தரையில் தவறி விழுந்தார். இதில் அவரது முதுகெலும்பு உடைந்தது. தரையில் படுத்துக்கொண்டு கதறிய அவரை மீட்ட நண்பர்கள் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: