இனி அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு

லக்னோ: எதிர்க்காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, சவுத்ரி அஜித் சிங் தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகளுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் 10 இடங்களையும் சமாஜ்வாடி 5 இடங்களை மட்டுமே பிடித்தது. ராஷ்டிரிய லோக் தளம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மக்களவை தேர்தல் முடிவுகள் திருப்தி தராததால் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஒருவர் மீது ஒருவர் அதிருப்தியுடன் இருந்து வந்தனர்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாயாவதி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாயாவதி தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ஒவ்வொருவரும் விழிப்போடு இருக்கிறார்கள். கடந்த 2012-2017ம் ஆண்டில் சமாஜ்வாடி ஆட்சியில் பகுஜன் சமாஜூக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை, தலித்துக்களுக்கு எதிராக பதவி உயர்வில் இடஒதுக்கீடு மற்றும் மோசமான சட்டம் மற்றும் ஒழுங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

எனினும் நாட்டின் நலனில் அக்கறை கொண்டு சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டோம். ஆனால் தேர்தலுக்கு பின்னர் சமாஜ்வாடியின் நடவடிக்கை எங்களை சிந்திக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.

பாஜவை இப்போது தோற்கடிக்க முடியவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அது சாத்தியமாகும்.  எனவே கட்சி மற்றும் அதன் நடவடிக்கை மீதுள்ள நலன் காரணமாக இனி வரும் அனைத்து சிறிய மற்றும் பெரிய தேர்தல்களில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

Related Stories: