பத்து ரூபாய் நாணயங்களை வாங்க தடை அரசு போக்குவரத்து கழக திருப்பூர் கிளை மேலாளர் சஸ்பெண்ட்

கோவை: அரசு பஸ்களில் பயணிகளிடமிருந்து பத்து ரூபாய் நாணயங்களை வாங்கக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர் கிளை மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசு ேபாக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் அரசு பஸ்களில் கண்டக்டர்கள், பயணிகளிடமிருந்து பத்து ரூபாய் நாணயங்களை வாங்கக்கூடாது என கோவை கோட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர் கிளை மேலாளர் தனபால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுற்றறிக்கை அனுப்பினார். இதை, அனைத்து கண்டக்டர்களும் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்ததால், பயணிகள் அவதிக்குள்ளாயினர். இதுதொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இச்சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர் கிளை மேலாளர் தனபால் நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிடெட், கோவை, திருப்பூர் மண்டலம், திருப்பூர் - 2 கிளையில் பணிபுரியும் கிளை மேலாளர் தனபால், நிர்வாகத்திடம் முன்அனுமதி பெறாமல், தன்னிச்சையாக அவரது பணிமனைக்கு தொடர்புடைய பஸ்களின் கண்டக்டர்களுக்கு 10 ரூபாய் நாணயங்களை தவிர்க்குமாறு எழுத்துப்பூர்வமாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

நிர்வாகத்திடம் எந்த ஒப்புதலும் பெறாமல்,  தன்னிச்சையாக  அனுப்பியுள்ளார். அத்துடன், பொதுமக்களிடம், அரசு  போக்குவரத்து கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளார். எனவே, இந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதுடன், இதற்கு காரணமாக இருந்த திருப்பூர் - 2 கிளை மேலாளர் தனபால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு மேலாண்மை இயக்குநர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: