மூடவும் முடியல... நடத்தவும் முடியல... சம்பளம் போட முடியுமா? பரிதவிப்பில் பிஎஸ்என்எல்

புதுடெல்லி: மத்திய அரசிடம் இருந்து நிதி வராவிட்டால், ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பதே சிக்கல்தான் என்ற நிலைக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலை ஏற்பட்டது. 4ஜி நெட்வொர்க் கூட இல்லாததால், தனது வாடிக்கையாளர்களின் பெரும் பகுதியை இந்த நிறுவனம் இழந்தது.  நஷ்டத்தை ஈடுகட்ட ஊழியர்களின்  எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக 50 வயதுக்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தில் ஓய்வு அளிக்கவும் அறிவிப்புகள் வெளியாகின.  ஆனால், நிறுவனத்தை மீட்டெடுக்கவோ, ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பதிலோ குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிலை குறித்து மூத்த பொது மேலாளர் புரான் சந்த்ரா, தொலைத்தொடர்பு அமைச்சக இணை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Advertising
Advertising

அந்த கடிதத்தில், நிறுவனத்தின் மாதாந்திர வருவாய்க்கும், செலவினங்களுக்கும் உள்ள இடைவெளி மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. அதாவது, நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியுமான என்ற நிலையை இது ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு உடனடியாக அவசர உதவியாக நிதி வழங்காவிட்டால் நிறுவனத்தை நடத்துவதே சிக்கலாகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.  பொதுத்துறை வங்கிகளில் அதிக நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்களுள் ஒன்றாக பிஎஸ்என்எல் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஆய்வறிக்கைப்படி இந்த நிறுவனத்தின் இயக்க செலவு 90,000 கோடியை தாண்டி விட்டது.  மறு சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள் நடந்தாலும், அதற்கான வழி கள் ஏற்படுத்தப்படவில்லை. அதோடு, நிறுவனத்தை மூடிவிடுவதற்கான பரிந்துரைகளும் ஏற்கப்படவில்லை என தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, திறமையான நிர்வாகமின்மை, ஊழியர்கள் சம்பளத்துக்கு அதிக செலவு, தேவையில்லாத அரசு குறுக்கீடுகள், நவீன மயமாக்கலில் தாமதம் போன்ற காரணங்களால் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. 4ஜி உரிமமே பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கொடுக்காமல் தற்போது, இன்னும் வழக்கத்துக்கு வராத 5ஜி உரிமத்தை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.  தற்போதைய நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகை உட்பட சுமார் 14,000 கோடி பாக்கி வைத்துள்ளது. இது தவிர சம்பளத்துக்கே 850 கோடி தேவைப்படுகிறது. இது கூட இல்லாவிட்டால் சம்பளம் கூட போட முடியாத நிலை ஏற்படும் என பிஎஸ்என்எல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* கடந்த நிதியாண்டின்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடன் சுமார் 14,000 கோடி.

* ஆனால், நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த நிறுவனத்துக்கு 11,000 ஏக்கர் நிலம் உள்ளது. இவற்றின் மதிப்பு 65,000 கோடி இருப்பினும், நிறுவனத்தை மீட்க தனியார் அளவுக்கு கடன் வாங்க முடியவில்லை.

* 2008-09 நிதியாண்டில் இந்த நிறுவனம் 575 கோடி நிகர வருவாய் ஈட்டியது. அதன்பிறகு தொடர்ந்து நஷ்டம்தான்.

தேவை 8,500 கோடி பரிசீலிப்பது 2,500 கோடி

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடன்களை அடைத்து ஓரளவு டவர்களையாவது இயங்க வைக்க சுமார் 8,500 கோடி தேவைப்படுவதாக இந்த நிறுவனத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. நிறுவனத்தை மீட்க கடந்த பிப்ரவரி மாதத்தில் ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தினர். இதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. ஆனால், தற்போது 2,500 கோடி கடன் வழங்க வங்கிகளிடம் மத்திய அரசு பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தை மீட்டெடுக்க இது போதுமான தொகை அல்ல என்கின்றனர் ஊழியர்கள்.

சம்பளத்துக்கே செலவாகும் வருவாய்

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஊழியர் சம்பளம், ஓய்வு பலன்கள் போன்றவை, 2017-18 நிதியாண்டின்படி நிறுவன இயக்க செலவில் சுமார் 66 சதவீதமாக உள்ளது.  ஆனால் பிற தனியார் நிறுவனங்கள் இத்தகைய செலவுக்கு 3 சதவீதம்தான் ஒதுக்கீடு செய்கின்றன. இருப்பினும் வருவாய் கடுமையாக சரிந்ததால் ஊழியர்கள் சம்பளத்துக்கே திண்டாடும் நிலைமை பிஎஸ்என்எல்லுக்கு ஏற்பட்டு விட்டது.

பேசாமல் மூடி விடலாம்

விஎஸ்என்எல் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தொலைத்தொடர்பு துறை வல்லுநருமான பி.கே.சிங்கால் கூறுகையில், நிர்வாகத்தின் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்த முடியாவிட்டால், அதை மூடி விடுவதே நல்லது. எம்டிஎன்ல் ஏற்கெனவே படுத்து விட்டது. பிஎஸ்என்எல் ஐசியுவில் உள்ளது. ஒருவரின் கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு நீந்தச்சொன்னால் எப்படி இருக்கும்?’’ என கூறியுள்ளார்.

Related Stories: