ஷாகிப், முஷ்பிகுர் அரை சதம் ஆப்கானிஸ்தானுக்கு 263 ரன் இலக்கு

சவுத்தாம்ப்டன்: வங்கதேச அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணிக்கு 263 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசியது. தாஸ், தமிம் இருவரும் வங்கதேச இன்னிங்சை தொடங்கினர். தாஸ் 16 ரன் எடுத்து முஜீப் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து தமிம் - ஷாகிப் ஹசன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்தது. தமிம் 36 ரன் எடுத்து முகமது நபி சுழலில் கிளீன் போல்டானார். ஷாகிப் - முஷ்பிகுர் இணை 3வது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்தது. நடப்பு உலக கோப்பை தொடரில் தனது 5வது அரை சதத்தை பதிவு செய்து அசத்திய ஷாகிப் 51 ரன்னில் பெவிலியன் திரும்பினார். சர்க்கார் 3, மகமதுல்லா 27 ரன்னில் வெளியேறினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முஷ்பிகுர் 83 ரன் (87 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி தவ்லத் பந்துவீச்சில் நபி வசம் பிடிபட்டார்.

மொசாடெக் உசேன் 35 ரன் எடுத்து கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க, வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன் குவித்தது. முகமது சைபுதின் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் முஜீப் 3, குல்பாதின் 2, தவ்லத், நபி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 263 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. கேப்டன் குல்பாதின் - ரகமத் ஷா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. ஷா 24 ரன், ஹஸ்மதுல்லா 11 ரன்னில் பெவிலியன் திரும்பினர். குல்பாதின் 47 ரன் (75 பந்து, 3 பவுண்டரி) எடுத்து ஷாகிப் பந்துவீச்சில் தாஸ் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த முகமது நபி 2 பந்துகளை மட்டுமே சந்தித்து டக் அவுட்டாகி வெளியேற, ஆப்கானிஸ்தான் 104 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

* வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் நடப்பு உலக கோப்பை தொடரில் இதுவரை விளையாடி உள்ள 6 இன்னிங்சில் 75, 64, 121, 124*, 41, 51 ரன் விளாசி உள்ளார். அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் அவர் ஆஸி. வீரர் டேவிட் வார்னரை (447) பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார்.

* உலக கோப்பையில் 1000 ரன் என்ற சாதனை மைல்கல்லையும் ஷாகிப் நேற்று கடந்தார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் வங்கதேச வீரர் மற்றும் சர்வதேச அளவில் 19வது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

Related Stories: