×

ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி

லண்டன்: அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்வதில் கடும் போட்டி நிலவும் நிலையில், இங்கிலாந்து அணி இன்று சமபலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவின் சவாலை சந்திக்கிறது. உலக கோப்பை லீக் சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக வரிந்துகட்டி வருகின்றன. ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த வாய்ப்பை இழந்துவிட்டன. எஞ்சியுள்ள 7 அணிகளில் நியூசிலாந்து (11), ஆஸ்திரேலியா (10), இந்தியா (9) அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி தனது கடைசி 3 லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், இதில் குறைந்தபட்சம் ஒரு வெற்றியையாவது பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நல்ல பார்மில் இருக்கும் ஆஸ்திரேலியாவை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று சந்திக்கிறது. கடந்த போட்டியில் இலங்கையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால், இங்கிலாந்து வீரர்கள் கடும் நெருக்கடியுடன் களமிறங்குகின்றனர். தொடக்க வீரர் ஜேசன் ராய் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதும், அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. அதே சமயம், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 6 போட்டியில் 5 வெற்றியை குவித்துள்ளதால் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளது. தொடக்க வீரர்கள் வார்னர், கேப்டன் பிஞ்ச் இருவரும் சிறப்பான பார்மில் உள்ளனர். அடுத்து வரும் ஸ்மித், கவாஜா, ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், கேரி ஆகியோரும் நன்கு ரன் குவித்து வருகின்றனர். ஸ்டார்க், கம்மின்ஸ், பெஹரண்டார்ப் வேகப் பந்துவீச்சும் ஆஸி. அணிக்கு வலு சேர்க்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் கடைசியாக நடந்த 4 போட்டியில், முதலில் பேட் செய்த அணி 3ல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மழை வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யலாம்.

பலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய போட்டி, ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், பேட் கம்மின்ஸ், ஜேசன் பெஹரண்டார்ப், நாதன் கோல்டர் நைல், ஆடம் ஸம்பா, நாதன் லயன். இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்),  டாம் கரன், லயம் டாவ்சன், லயம் பிளங்க்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

Tags : crisis ,Australia ,team ,England , Australia, England, England
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை