ஜூன் 28ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: அனைவரும் பங்கேற்க கொறடா சக்கரபாணி உத்தரவு

சென்னை: ஜூன் 28ல் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி  துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் காரணமாக, ஒரு மாதம் வரை நடைபெறும் மானிய  கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் 38 மக்களவை, காலியாக இருந்த 22 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் மொத்தமுள்ள 38 மக்களவை தொகுதியில் 37 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரும் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார். 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுகவும், 9 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவடைந்த நிலையில் மானிய  கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதற்கான சட்டப்பேரவை கூட்டம் வருகிற 28ம் தேதி முதல் தொடங்கும் என்று தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடந்த 20ம் தேதி அறிவித்தார். சட்டப்பேரவை கூட்டத்துக்கு முன்பாக  அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் புதிய அறிவிப்பு, சட்ட  மசோதாக்கள் நிறைவேற்றுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை 28ம் தேதி கூட உள்ள நிலையில் சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 1 முதல் 31ம் தேதி வரை  நடைபெறும் என்று சபாநாயகர் பி.தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 28-ம் தேதி மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், ராதாமணி ஆகியோருக்கு இரங்கல்  தெரிவிக்கப்படும். 29, 30-ம் தேதி அரசினர் விடுமுறை. மொத்தம் 23 நாட்கள் சட்டமன்றம் நடைபெறுகிறது. சட்டமன்றம் நடக்கும் எல்லா நாட்களிலும் கேள்வி நேரம் இருக்கும் என்று சபாநாயகர் பி.தனபால்தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 11 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அனைத்து  எம்எல்ஏக்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் திமுக கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அரசின் கவனத்துக்கு சொல்ல வேண்டிய பிரச்சனைகளை மின்னஞ்சலில் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். voiceofTN@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு பொதுமக்கள் தகவல் அனுப்பலாம்  என ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். குடிநீர் பஞ்சம் தொடங்கி வேலையில்லாத திண்டாட்டம் வரை தமிழகத்தில் நிலவும் ஒவ்வொரு பேரவலமும் சட்டசபையில் விவாதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.  சட்டசபை கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகள் விவாதிகப்படுவதை திமுக உறுதி செய்யும் என கூறியுள்ளார்.

Related Stories: