மக்கள் உயிரோடு விளையாடும் சுகாதாரத்துறை: கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தலையில் தையல் போட்டு சிகிச்சை அளிக்கும் துப்புரவு தொழிலாளி

மன்னார்குடி: தமிழ்நாடு சுகாதாரத்துறை இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளதாக  அரசு கூறிக்கொண்டபோதிலும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில்  போதிய டாக்டர்கள், நர்சுகள் பணியிடங்கள் நிரப்பபடவில்லை. இதனால்  பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் 24 மணி நேரமும் மருத்துவ வசதி பெற முடியாமல் மக்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்படியே டாக்டர்கள் இருந்தாலும், இந்த கேசை இங்கு பார்க்க முடியாது. மாவட்ட தலைநகரங்களுக்கு செல்லும்படி  அனுப்பி விடுகிறார்கள். இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், விஷம் குடித்தவர்கள் போகும் வழியிலேயே  உயிரிழக்க  நேரிடுகிறது. பல ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்ஸ்கள் இருப்பதில்லை. இதனால் ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் ஊழியர்களே பல இடங்களில் பிரசவம் பார்ப்பதும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தமிழகத்தை பொறுத்தவரை சர்வசாதாரணமாக  நடந்து வருகிறது. எனவே, அரசு ஆஸ்பத்திரிகள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும், போதுமான டாக்டர்கள், நர்ஸ்கள் நியமிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலரல்கள், அரசியல் கட்சி தலைவர்கள் குரல் எழுப்பினாலும் தமிழக அரசு கண்டு  கொண்டதாகவே தெரியவில்லை.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் பெண் துப்புரவு ஊழியர் ஒருவர் விபத்தில் படுகாமடைந்த ஒரு பெண்ணுக்கு தலையில் தையல் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. அதன் விவரம் வருமாறு:  திருவாருர் மாவட்டம் கூத்தாநல்லூரில்  அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  கூத்தாநல்லூர் நகராட்சி மற்றும்  பூதமங்கலம்,  கமலாபுரம், பாண்டுகுடி,  உள்ளிட்ட 15க்கு மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட   மக்கள்   தினந்தோறும் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில்  தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால், இந்த அரசு ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்க்ள, நர்ஸ்கள், மருத்துவ உதவியாளர்கள் இல்லை.  எனவே இந்த மருத்துவமனையில் செவிலியர்கள் மருத்துவம் பார்ப்பதும் சிகிச்சை அளிப்பதும் ,துப்புரவு பணியாளர்கள்  விபத்துக்குள்ளாகி வருபவர்களுக்கு தையல் போடுவதும் அன்றாடம் நடந்து வருகிறது.

2 தினங்களுக்கு முன் தலையில் அடிபட்டு ஒரு பெண் கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். அப்போது அங்கு டாக்டர் இல்லை. நர்ஸ் பணியில் இருந்தார். அவர் அங்கிருந்த பெண் துப்பரவு பணியாளரிடம்  அந்த பெண்ணுக்கு  சிகிச்சை அளிக்கும்படி கூறினார். இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர், காயமடைந்த பெண்ணை படுக்க வைத்து தலையில்  காயம் பட்ட இடத்தில் தையல் போட்டு  மருந்து போட்டு அனுப்புகிறார்.  எம்.எஸ். படித்த டாக்டர் போல துப்புரவு பணியாளர் தையல் போட்டார். அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து எதுவும் கொடுக்காமலேயே தையல் போட்டதால் அவர் கதறி துடித்தார். ஆனாலும் துப்புரவு பெண் பணியாளர் அசரவில்லை. துணிந்து  கோணிப்பையை தைப்பது போல தைத்து முடித்து அந்த இடத்தில் மருந்து போட்டு அனுப்பி விடுகிறார்.

எம்.பி.பிஎஸ். படிக்காமல், எம்.எஸ். படிக்காமல், நீட் தேர்வு எழுதாமல் அந்த பெண் தொழிலாளர் தையல் போட்ட காட்சியை அந்த பெண்ணுடன் உதவிக்கு வந்தவர் செல்போனில் பதிவு செய்து  சமூக வலைதளங்களில் பரவ விட்டு விட்டார்.  இந்த காட்சி இன்று வைரலாக பரவி வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. இதுகுறித்து கூத்தா நல்லூர்  பொதுமக்கள் கூறியதாவது: கூத்தாநல்லூர்  தாலுகாவாக அறிவிக்கப்பட்டு  பல வருடம் ஆகிறது. ஆனாலும் கூத்தாநல்லூர்  தாலுகா மருத்துவமனையாக இன்னும் தரம் உயர்த்தப்படவில்லை. இங்கு 5 டாக்டர்கள்  பணியிடம் உள்ளது. ஆனால் 3 டாக்டர்கள் தான் உள்ளனர். 6 நர்ஸ்களுக்கு 4 பேர் தான் பணியில் உள்ளனர். இப்படி எல்லா பணியிடங்களும் காலியாகவே உள்ளன. தையல் போடுகிறவர், டாக்டர், நர்ஸ்கள் பணி செய்யும்போது அவர்களுக்கு  உதவியாக இருக்க வேண்டும். ஆனால் அவராகவே முழுவதுமாக இந்த பணியை செய்து உள்ளார்.  எனவே அந்த பெண் மீது மட்டுமல்லாமல், இதனை அனுமதித்த டாக்டர், நர்ஸ் ஆகியோர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படவேண்டும்.குறிப்பாக 24 மணி நேரமும்  இயங்கும்படி இந்த ஆஸ்பத்திரியின் தரத்தை உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: