நாகர்கோவில் பாலமோர் சாலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் உடைக்கப்படும் குடிநீர் குழாய்கள்: வீணாக சாலையில் பாயும் தண்ணீர்

நாகர்கோவில்: புத்தன் அணை குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணியில் மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது.  நாகர்கோவில் மாநகராட்சிக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.  கோடை காரணமாக அணை வறண்டு விட்டதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வினியோகம் இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் மழை இருந்ததால் பேச்சிப்பாறை அணையில் இருந்தும் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. பாசன கால்வாய்கள் மூலம் வரும் மழை தண்ணீரை பம்பிங் செய்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது.  மாநகர பகுதிகளில் 20 நாட்கள் வரை குடிநீர் வராமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். நிலைமையை சமாளிக்க டேங்கர் லாரிகள் மூலம் நகர பகுதிகளில் தண்ணீர் வினியோகம் இருக்கிறது.

 இருப்பினும் பொதுமக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு புத்தன் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய  குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  இந்த திட்டத்துக்காக தடிக்காரன்கோணத்தில் தொடங்கி புத்தேரி வரையிலான பாலமோர் சாலையில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது. இதற்காக சாலைகளை தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்களில் சாலையை சீரமைக்காததால் விபத்துக்களும், உயிர் பலிகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.  குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்களில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே ஈசாந்திமங்கலம் தொந்திக்கரை பகுதியில் குழாய் பதிக்க குடிநீர் வடிகால் வாரியம் பள்ளம் தோண்டியது. அப்போது முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் 800 மி.மீ. விட்டம் கொண்ட குடிநீர் குழாய் பள்ளம் தோண்டும் போது உடைந்தது. மாலையில் பள்ளம் தோண்டும் போது 600 மி.மீ. விட்டம் கொண்ட குடிநீர் குழாயும் உடைக்கப்பட்டது.  இதனால் தற்போது நாகர்கோவிலுக்கு குடிநீர் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மாநகர மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 20 நாட்கள் வரை தண்ணீர் இல்லாத நிலையில் குழாய்கள் உடைப்பால் இன்னும் நிைலமை மோசமாகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. புத்தன் அணை குடிநீர் திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கப்படும் இடங்களை முன் கூட்டி மாநகராட்சியிடம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தால், அந்த பகுதிகளில் ஏற்கனவே குழாய்கள் உள்ளது பற்றி தகவல் தெரிவிக்க முடியும். அவ்வாறு உடைப்பு ஏற்பட்டால் கூட உடனடியாக மாநகராட்சி பணியாளர்கள் சரி செய்வார்கள். ஆனால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்காததால், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பெருமளவில் வீணாக போகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இனியாவது  குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மாநகராட்சிக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து, முக்கடல் குடிநீர் குழாய் வரும் பகுதிகளில் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

22 நாளாக தண்ணீர் வரவில்லை:  நாகர்கோவில் மாநகர பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய பேச்சிப்பாறை அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த தண்ணீர்வரவில்லை. இதன் காரணமாக நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் நாட்கள் எண்ணிக்கை நீண்டு வருகிறது. ஒரு சில இடங்களில் 22 நாட்கள் வரை ஆகிறது. குடிநீர் 3 நாட்களுக்கு ஒரு முறை வழங்க கோரி திமுக சார்பில் வடசேரியில் மறியல் போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதி குடிநீர் தேவைக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் அணையில் இருந்து தண்ணீர் திறக்க கலெக்டர் இன்னும் உத்தரவிடவில்லை. உத்தரவை எதிர்நோக்கி மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.

அதிகாரிகள் கூறுகையில், பேச்சிப்பாறை தண்ணீர் வராததால், அனந்தனாறு சானலில் வரும் தண்ணீரை பம்ப் செய்து முக்கடல் அணைக்கு கொண்டு சென்று பயன்படுத்தி வருகிறோம். மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி தண்ணீர் விநியோகம் செய்யும் விதத்தில் பேச்சிப்பாறை அணையை திறக்க கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடுவார் என எதிர்பார்க்கிறோம். அப்படி அணை திறக்கப்படும் நிலையில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு சீரான இடைவெளியில் தண்ணீர் விநியோகம் செய்ய முடியும் என்றார்.

Related Stories: