×

டிடிவி தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்கிறார்: தங்க.தமிழ்ச்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டு...கலக்கத்தில் அமமுக

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாக தங்க.தமிழ்ச்செல்வன் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக இரண்டாக பிரிந்தது. தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் மற்றொரு அணியாக இருந்தனர். பின்னர் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா ஆலோசனைப்படி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். தொடர்ந்து சில மாதங்களுக்குப்பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்றார். ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கினர். இதன் பிறகு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இணைந்து செயல்பட தொடங்கினார். இவர்களின் இணைப்புக்கு பின் எதிர்ப்பு தெரிவித்து 19 எம்எல்ஏக்கள், டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் தங்க தமிழ்ச்செல்வன் ஒருவர் ஆவார். பின்னர் ஜக்கையன் எம்எல்ஏ டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து 18 எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரன் பக்கம் இருந்து செயல்பட்டு வந்தனர். கட்சியின் நடவடிக்கை குறித்தும், அடுத்த கட்ட செயல் பாடுகள் குறித்தும் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், பழனியப்பன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் ஆலோசனையின் பெயரில் டிடிவி தினகரன் நடவடிக்கை மேற்கொண்டு வந்தார். 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த பிறகு அனைவரும் ஒன்றிணைந்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு எதிராக வரவே தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைதொடர்ந்து நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 பேரை அவர்களின் தொகுதிகளை வேட்பாளராக நிறுத்தினார். தங்க தமிழ்செல்வனை சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டியில் வேட்பாளராக நிறுத்தாமல் தேனி தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தினர். இதனால் அமமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக காணப்பட்டது.

தேர்தலின் முடிவில் அமமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இது டிடிவி தினகரனை நம்பி வந்த எம்எல்ஏக்கள் மற்றும் பதவியை இழந்த தங்க தமிழ்ச்செல்வன் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறாமல் கட்சியில் இருந்து யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்று டிடிவி தினகரன் கூறினார். இதனால் மைக்கேல் ராயப்பன் உட்பட முக்கிய நிர்வாகிகள் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.  இதையடுத்து டிடிவி தினகரனுக்கு மிகவும் நெருங்கிய நபரான தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு இணைய உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வரை சந்திப்பது குறித்து அமைச்சர் வேலுமணியுடன் ஆலோசனை மேற்க்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விரைவில் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையுள்ளதாக கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்ட போது இது போன்ற வதந்திகளை யார் பரப்புகின்றனர் என்று தெரியவில்லை நான் அதிமுகவில் இணையவில்லை என்றார். இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக தங்க.தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரன் உதவியாளரிடம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் பேசிய தங்க.தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். டிடிவி தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாகவும் தங்க.தமிழ்ச்செல்வன் பகிரங்கமாக குற்றச்சாட்டினார். நீ தேனியில் கூட்டம் போட்டா நான் நாளைக்கு மதுரையில கூட்டம் போடுற பாக்கிறியா என்றும் இப்படி பேடித்தனமாக அரசியல் பண்ண வேனா தோத்து போய்டுவா டிடிவி தினகரன் என்று ஆவேசமாக பேசியுள்ளார். தங்க.தமிழ்ச்செல்வனின் பேசிய ஆடியோவால் அமமுக மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : DDV Dinakaran , DTV Dinakaran, cowardly, political, gold
× RELATED உள்ளாட்சி தேர்தல் குறித்து 22ம் தேதி...