ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்: திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்...பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு!

புதுடெல்லி: ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகளுமம் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியர்களின் தனிநபர் அடையாள எண்ணாக ஆதார் அட்டை நடைமுறையில் உள்ளது. அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன கடந்தாண்டு தீர்ப்பளித்தது. இருப்பினும், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் இணைப்பது கட்டாயமல்ல என்று கூறியது. அதுமட்டுமல்லாது, குறைந்தபட்ச தகவல்கள் மட்டுமே ஆதார் எண்ணுக்காக பெறப்பட வேண்டும் எனவும் ஆதார் விவரங்களை பாதுகாக்க வலுவான பாதுகாப்புகள் தேவை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மசோதா தாக்கல்

ஆனால், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்ற அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அவசர சட்டம் காலாவதியானதால், அதற்கு மாற்றாக, வங்கி கணக்கு, சிம் கார்டுகளை பெற ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வகை செய்யும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

கட்சிகள் எதிர்ப்பு

 

இந்த நிலையில், இந்த மசோதாவிற்கு புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி. பிரேமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் இந்த மசோதா உள்ளது. தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை எளிதாக பெற இந்த மசோதா வழிவகை செய்யும் என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப தான் ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது. இதுவரை 60 கோடி பேர் ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கொடுத்து சிம் கார்டுகளை பெற்றுள்ளனர் என்று கூறினார்.

Related Stories: