ஈரோடு அருகே இலவச மடிக்கணினி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

ஈரோடு: இலவச மடிக்கணினி வழங்கக்கோரி ஈரோடு வீரப்பன் சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் மாணிக்கம்பாளையம் ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஈரோடு வீரப்பன் சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் மாணிக்கம்பாளையம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 2017-2018ம் ஆண்டுகளில் படித்த மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கவில்லை என கூறி 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு பயின்றவர்களுக்கு வழங்காமல் இந்தாண்டு மாணவர்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.இந்த சாலை மறியல் போராட்டத்தினால் ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் கடந்த 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் இங்கு சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகள் குறிப்பாக சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுடைய வண்டிகளின் சாவிகளை பறித்துக் கொண்டு செல்ல அனுமதிக்காத காரணத்தினால் பொதுமக்களுக்கும் மாணவ, மாணவியருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து தற்போது ஏராளமான காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தையானது நடைபெற்று வருகிறது. மேலும் ஈரோடுனுடைய முக்கியமான பிரதான சாலையில் இந்த போராட்டம் நடைபெறுவதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இதையடுத்து விரைவில் இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி,அதிகாரிகள்  மற்றும் காவல் துறையினரும் மாணவர்களுடன் தொடர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மேலும் 2 மாத காலத்திற்குள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் மாணவர்கள் அதிகாரிகளுடைய உறுதிமொழியை ஏற்காமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தான் தற்போது போலீசார் மாணவ, மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கலைந்து செல்ல மறுத்த மாணவர்களை குண்டுக்கட்டாக கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது. 

Related Stories: