ஆண்டிபட்டி அருகே சாக்கடை ஓரம் இரவு, பகலாக ஒழுகும் குடிநீரை பிடிக்கும் மக்கள்

ஆண்டிபட்டி :  ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தில் சாக்கடையின் ஓரத்தில் ஒழுகும் ஒழுகு தண்ணீரை இரவு, பகல் பாராமல் காத்திருந்து பிடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரத்தில் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் வழங்கி வந்தனர். மேலும் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க குன்னூர் - வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்கி வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழையில்லாததால் 80 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

இதனால் குடியிருக்க அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறுகளில் நீர் குறைந்து பழுது ஏற்பட்டதால் குடிநீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.  இந்நிலையில் சாக்கடையின் ஓரத்தில் உப்பு தண்ணீர் குழாயில் ஒழுகும் தண்ணீரை  இரவு பகல் பாராமல்  நீண்ட நேரம் காத்திருந்து பிடித்து வருகின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் சாக்கடை நீரும் கலந்து பிடித்து விடுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும், இதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்று கிராமமக்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,கடந்த ஓராண்டுக்கு மேலாக இப்பகுதியில் போதிய குடிநீர் கிடைக்கவில்லை.  இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள், சில மாதங்களுக்கு முன்னர் குடிநீர் கேட்டு ஆண்டிபட்டி -  வேலப்பர் கோயில் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டோம். இதனையடுத்து அரசு ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. கடந்த வாரத்தில் ஊரில் மீண்டும் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்தனர். அதுவும் 500 அடி போட்டும் தண்ணீரும் வரவில்லை.

ஆனால் தெப்பம்பட்டி பகுதியில் ஏற்கனவே குடிநீருக்காக போட்டிருந்த பழைய ஆழ்துளைக் கிணற்றை சுத்தம் செய்து  ஆழத்தை அதிகரித்ததில் தண்ணீர் உள்ளது. அங்கிருந்து ஊருக்கு வரும், இந்த குடிநீரை வழியில் உள்ள சில மர்மநபர்கள் பைப்புகளை ஓட்டை போட்டு தண்ணீர் திருடுவதை தடுத்தால் மட்டுமே ஊருக்கு தண்ணீர் வரும். இதனால் அரசு இரும்பு பைப்புகளை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Related Stories: