×

மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்..: மத்திய சுற்றுச்சூழல்துறைக்கு வரைபடத்துடன் கடிதம் எழுதியுள்ள கர்நாடக அரசு!

பெங்களூரு: மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு நீண்ட காலமாக முயன்று வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புதிய அணைக்கான வரைபடத்துடன்  அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. கடந்த 20ம் தேதியன்று அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில், அந்த கடிதத்தில், 2011ம் ஆண்டு கணக்குப்படி சுமார் 61 லட்சம் மக்கள்தொகை உள்ள பெங்களூரு மாநகர் மற்றும், சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்வதற்ககாகவும் மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

இத்திட்டத்தின் மூலம் 400 மெகாவாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்து, மாநிலத்தின் மின்தேவையை பூர்த்தி செய்ய முடியும். கர்நாடகாவில் காவிரியும் கிருஷ்ணா நதியும் ஓடுகிறது. இருந்த போதிலும் கர்நாடகா மாநிலத்தில் வறட்சியும், மின்சார பற்றாக்குறையும் ஏற்படுகிறது. எனவே மின் பற்றாக்குறை மற்றும் பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கர்நாடகா அரசு, தமிழக எல்லைப்பகுதியை ஒட்டிய மேகதாது அருகே அணை கட்ட முடிவு செய்துள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீர் போக கூடுதல் தண்ணீரை இந்த அணை மூலம் சேமித்து கர்நாடகாவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். மேலும், இந்த மேகதாது அணை திட்டத்தின் மதிப்பீடு ரூ.9,000 கோடியாகும்.

மேகதாது அணைக்காக மொத்தம் 5252.400 ஹெக்டார் நிலம் தேவைப்படுகிறது. 4996 ஹெக்டேர் நிலம் அணையில் நீர் தேக்கவும், 256.40 ஹெக்டார் நிலம் பிற கட்டுமானங்களுக்கும் தேவைப்படுகிறது. இதில் 3181.9 ஹெக்டார் நிலம் காவிரி வனப்பகுதியிலும், 1869.5 ஹெக்டார் ரிசர்வ் வனப்பகுதியிலும், 201 ஹெக்டார் ரெவென்யூ பகுதியிலும் வருகிறது. புதிய அணையினால் 5 கிராமங்கள் மூழ்கும். மூழ்கும் கிராமங்களில் உள்ளவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுவார்கள். இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதியளிக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய நீர்வளத்துறையிடம் கர்நாடக அரசின் கோரிக்கை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Karnataka Govt ,Central Environment Department , Mekedatu Dam, Central Environment Department, Map, Letter, Karnataka Government
× RELATED உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு...