தடுப்பணை கட்ட தனியார் நிறுவனங்களுக்கு தடை இல்லை: கலெக்டர் ராஜாமணி

கோவை: தொழில் நிறுவனங்கள், சி.எஸ்.ஆர்., நிதியில் தடுப்பணை கட்டும் பணியை தாங்களே மேற்கொள்ளலாம்; பொதுப்பணித்துறையில் பணம் செலுத்தும் நடைமுறை இனி தேவையில்லை என்று கோவையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொழில் நிறுவனங்கள் லாபத்தின் ஒரு பகுதியை நிறுவனம் செயல்படும் பகுதியில், சமுதாய மேம்பாட்டுக்காக செலவழிக்க வேண்டும் என்பது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும் .

கார்ப்பரேட் நிறுவனங்களின் சமுதாய பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்.,) என்கிற இந்த நடைமுறையால், அரசின் சுமை குறைகிறது. மக்கள் குறைபாடுகளும் தீர்க்கப்படுகின்றன. எனவே, இதை அரசும் ஊக்குவிக்கிறது. கோவையில் இதை பின்பற்றி சமுதாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. அத்தகைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும், தொண்டு நிறுவன பிரதிநிதிகளும் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராஜாமணி தலைமையில் கோவையில் நடந்தது.

இதில் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையில் சேதமுற்ற நான்கு தடுப்பணைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் இருப்பதாக தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர். இதை சரி செய்ய ஏற்பாடு செய்வதாக கூறிய கலெக்டர் ராஜாமணி தொழில் நிறுவனத்தினர் தங்கள் சி.எஸ்.ஆர்., நிதியில் தடுப்பணை கட்டும் பணிகளை மேற்கொள்ளலாமே என்று வேண்டுகோள் விடுத்தார்.

தொழில் நிறுவனத்தினர் அதில் இருக்கும் நடைமுறை சிரமங்களை தெரிவித்தனர். தடுப்பணை கட்டுவதற்கான நிதியை பொதுப்பணித்துறையிடம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கலெக்டர் இனி அத்தகைய சிரமங்கள் இருக்காது என உறுதியளித்தார். பொதுப்பணித்துறைக்கு பணம் செலுத்துவதற்கு பதிலாக அணையை நேரடியாக தொழில் நிறுவனங்களே கட்டுவதற்கு தேவையான உதவிகளும், உத்தரவுகளும் வழங்கப்படும்.

பொதுப்பணித்துறையினர் மேற்பார்வை பணியை மட்டுமே செய்வார்கள் என கூறினார். கலெக்டரின் இந்த அறிவிப்பு தொண்டு நிறுவனத்தினர் தொழில் நிறுவனத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தேவையான இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு இனி அரசு நிதியை நிர்வாக நடைமுறைகளை எதிர்பார்த்திருக்க தேவையில்லை என்பதால் பணிகள் உடனுக்குடன் நடக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: