×

பீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: பீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் குழந்தைகளை தாக்கும் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் தற்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்ததால், கடந்த சில நாட்காளக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட பழங்களை தின்றதால் குழந்தைகள் பலியாகி வருவதாகவும் கூறப்படுகிறது. அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மற்றும் ஜப்பான் என்சபிலிட்டிஸ் என இருவகையான மூளைக்காய்ச்சல் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும், கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவியுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய மருத்துவ நிபுணர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி முசாபர்பூர் பகுதியில் மூளை காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இவ்விவகாரத்தை முன்வைத்து வழக்கறிஞர்கள் மனோகர் பிரதாம் மற்றும் சன்பிரீத் சிங் அஜ்மனி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இந்த வழக்கானது நீதிபதி சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூளைக்காய்ச்சல் நோயில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள்? என்று நீதிபதி கேள்வியெழுப்பினார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பாக இன்னும் ஒரு வாரத்துக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய அரசு, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதில், மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மூளைகாய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க என்ன ஏற்பாடு என்று மத்திய அரசும், உ.பி மாநில அரசும் பதில் தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் இறப்பது குறித்து தானாக வழக்கை எடுத்துக் கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய சுகாதாரத்துறைக்கும், பீகார் மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Supreme Court ,state governments ,children ,death ,Bihar , Bihar, Encephalitis, central government, state government, supreme court, notice
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...