மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை; தங்கள் பதவியை காப்பாற்றவே யாகம் நடத்தினர்: மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை : குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 2000 பேர் பங்கேற்று உள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் ஜெ.அன்பழகன், தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் கேள்வி :

குடம் இங்கே, குடிநீர் எங்கே ? என்று குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை உடனடியாக தமிழக அரசு போக்க வேண்டும்.  தண்ணீர் எங்கே, தண்ணீர் எங்கே என்பதுதான் தமிழ்நாடு மக்களின் குரலாக உள்ளது. மேலும் அ.தி.மு.க.வின் எட்டு ஆண்டுகால ஆட்சியில் ஏதாவது ஒரு குடிநீர் திட்டத்தையாவது இந்த அரசு கொண்டுவந்துள்ளதா; என்றும் வேண்டிய அளவு தண்ணீர் இருந்தால் மக்கள் ஏன் சாலைக்கு வந்து போராடப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு :

நிதி, நீதி, நேர்மை சட்டம் ஒழுங்குக்கும் பஞ்சம்; இப்போது தண்ணீருக்கும் பஞ்சம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தண்ணீர் பஞ்சத்தைப் பற்றி முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கவலைப்படவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து வருவதை கவனித்து அதிமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. பதவியை காப்பாற்றிக் கொள்ளவே அமைச்சர்கள் கோயில்களில் யாகம் நடத்தியதாக ஸ்டாலின் விமர்சனம் செய்தார்

முதல்வர் எடப்பாடியை நீக்க வேண்டும் :

முதல்வர் எடப்பாடியை பதவியில் இருந்து முதலில் நீக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தண்ணீர் இல்லாமல் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பப் பெற்றோர் தயங்குகின்றனர்; ஓட்டல்களும் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறை ஊழல் ஆட்சித்துறையாக மாறிவிட்டதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் ஊழல் :

கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து முன்பே தி.மு.க. ஆதாரங்களுடன் அமல்படுத்தி உள்ளது. மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி திமுக. ஆட்சிக்கு வந்தவுடன் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டம் திமுக ஆட்சியில் ஒன்பது மாதங்களில் நிறைவேற்றப்பட்டதாக மு.க. ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.

Related Stories: