முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

சென்னை: தமிழக சட்டப்பேரவை வருகிற 28-ம் தேதி கூடும் நிலையில் முதல்வர் எடப்பாடி தலைமையில்  அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் 38 மக்களவை, காலியாக இருந்த 22 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 38 மக்களவை தொகுதியில் 37 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவடைந்த நிலையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதற்கான சட்டப்பேரவை கூட்டம் வருகிற 28ம் தேதி முதல் தொடங்கும் என்று தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடந்த 20ம் தேதி அறிவித்தார். சட்டப்பேரவை கூட்டத்துக்கு முன்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழக  அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் தலைமை செயலகத்தில் தொடங்கியுள்ளது.

 

இக்கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சனை, தொழில் முதலீடு உள்ளிட்டவை குறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சட்டமன்ற தொடரில் அறிவிக்கப்பட உள்ள புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய சட்ட  மசோதாக்கள் நிறைவேற்றுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு  கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். கவர்னர் அனுமதியின் பேரில்  அந்த சட்ட மசோதா சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: