ஐகோர்ட்டில் தமிழக நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கோரி போராட்டம் : ராமதாஸ் பேச்சு

சென்னை: உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த  நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொதுக்குழு கூட்டம் சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி, வடக்கு மண்டல செயலாளர் ஏ.கே.மூர்த்தி, துணை பொதுச்செயலாளர் கே.என்.சேகர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் இணை செயலாளர் தமிழரசன் வரவேற்புரையாற்றினார்.

பின்னர் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும். மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு கிளையை சென்னையில் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் திருநங்கையர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக சமூக பாதுகாப்பு படை அமைக்கப்படும். மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்: பா.ஜ.கவுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உறுதுணையாக இருப்பது போன்று பா.ம.க.வுக்கு வழக்கறிஞர்கள் சமூக நீதி பாதுகாப்பு பேரவை பலமாக இருக்க வேண்டும். வெறுப்பு அரசியலுக்கு வழக்கறிஞர்கள் பதிலடி கொடுக்க வேண்டும். அன்புமணி என்ற நல்ல இளம் தலைவரை தமிழகத்துக்கு பா.ம.க. கொடுத்திருக்கிறது. அநியாயம் எங்கு நடந்தாலும் அங்கு சென்று சமூக நீதிக்காக பா.ம.க தொடர்ந்து போராடும். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும் கூட்டத்தில் அன்புமணி பேசுகையில்: மூன்று சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்த ஒரே தலைவர் ராமதாஸ். வாக்குக்காக நாங்கள் ஒரு போதும் போராட்டம் நடத்தியது இல்லை. தமிழக மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாமக போராடி வருகிறது. எல்லா சமுதாயமும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். எங்களை எதிர்ப்பது தான் திருமாவளவனின் அரசியல் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: