திருநங்கைகளுடன் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டதால் போலீஸ்காரரை சுற்றிவளைத்து தாக்கிய 4 பேர் குண்டாசில் கைது

சென்னை: திருநங்கைகளுடன் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்த போதை ஆசாமிகள் 4 பேர் உட்பட 7 பேரை போலீசார் குண்டர் சட்த்தில் கைது ெசய்தனர். சென்னை வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் திருநங்கைகளிடம் பேசுவோர் மற்றும் தகராறில் ஈடுபடும் நபர்களை கைது செய்யக்கோரி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருநங்கைகளுடன் தகராறில் ஈடுபடுவதும், பாலியலுக்கு அழைக்கும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், பாண்டி பஜார் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவலர் கார்த்திகேயன் (32) கடந்த 13ம் தேதி நள்ளிரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் வள்ளுவர் கோட்டம் மேம்பாலம் அருகே அதிகாலை 2 மணிக்கு திருநங்கைகளுடன் காரில் வந்த 4 பேர் சாலையில் நின்று அவர்களை பாலியலுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த காவலர் கார்த்திகேயன் ‘இங்கு நிற்க கூடாது’ என்று கூறி அவர்களை அனுப்பினார். பின்னர் சிறிது நேரம் கழித்து காரில் சென்ற 4 பேரும் திரும்பி வந்து காவலரை வழிமறித்து, ‘எங்களையே மிரட்டுகிறாயா?’ என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காவலருக்கும் காரில் வந்த 4 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த 4 பேரும், போலீஸ்காரரை சுற்றி வளைத்து தாக்கினர். அப்போது போலீஸ்காரர் வைத்திருந்த லத்தியை பிடுங்கி சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் வலி தங்க முடியாமல் காவலர் அலறி துடித்தார். அப்போது அவ்வழியாக வந்த போலீசார், 4 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று விசாரணை நடத்தினர்.அப்போது, ஏழுகிணறு போர்த்துகீஸ் தெருவை சேர்ந்த சுலைமான் (32), ராயபுரத்தை சேர்ந்த அபர் உசைன் (35), எழுகிணறு போர்த்துகீஸ் சர்ச் சாலையை சேர்ந்த முகமது ரிஸ்வான் (32), முகமது நவ்ஷாத் அலி (34) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதைதொடர்ந்து காவலரை பணி ெசய்ய விடாமல் தாக்கிய 4 பேரையும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது ெசய்ய பாண்டிபஜார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். அதேபோல், கஞ்சா வழக்கில் தொடர்புடைய சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த சேஷ்ராம்(எ)கணேசன்(43), செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த மணலி, சின்ன சேக்காடு ஹரி(எ)ஹரிஹரன்(எ)கவுரிசங்கர்(22), புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை ேசர்ந்த தினேஷ்(26) ஆகியோரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories: