100 கிலோ தங்க சிலை மோசடி விவகாரம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் குருக்கள் கைது : திருச்சி சிறையில் அடைப்பு

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 100 கிலோ தங்கம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான குருக்கள் ராஜப்பா கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 1,600 ஆண்டு பழமையான சோமஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி சிலைகள் சேதமடைந்ததாக கூறி புதிய ஐம்பொன் சிலைகள் செய்ய ₹2.82 கோடி மதிப்பிலான 8.7 கிலோ தங்கம் நன்கொடையாக பக்தர்களிடமிருந்து பெறப்பட்டது. ஆனால் புதிய சிலைகள் செய்வதில் நன்கொடையாக பெற்ற தங்கத்தை சேர்க்காமல் மோசடி செய்ததாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில் அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா, ஸ்தபதி முத்தையா, குருக்கள் ராஜப்பா உள்ளிட்ட 9 பேர் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் ஏற்கனவே முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா, ஸ்தபதி முத்தையா ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் குருக்கள் ராஜப்பா (87) விசாரணை காலத்தில் கனடா நாட்டுக்கு தப்பி சென்றார். இதையடுத்து குருக்கள் ராஜப்பா வெளிநாடு தப்பியோடியதாக வந்த தகவலையடுத்து அனைத்து விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதையடுத்து அவர் இந்தியாவுக்கு வந்தால் பிடிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் கனடா நாட்டில் இருந்து நேற்று முன்தினம் காலை மும்பை விமான நிலையத்துக்கு குருக்கள் ராஜப்பா வந்தபோது விமான நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவரை நேற்று முன்தினம் இரவு கும்பகோணத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாதவ ராமானுஜர் முன்பு அவரது வீட்டில் ஆஜர்படுத்தினர். அவரை ஜூலை 5ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தேவநாதன் குருக்கள் என்பவர் மூலவர் சன்னதில் உள்ள லிங்கத்தின் மீது கால் வைத்தவாறு பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலானது. தற்போது கைதான ராஜப்பா குருக்கள், தேவநாதன் குருக்களின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: