வழக்குகள் நிலுவை அதிகமாவதால் பழைய வருமான வரி கணக்கு மறு ஆய்வு கால அளவை 4 ஆண்டாக குறைக்க முடிவு

புதுடெல்லி: பழைய வருமான வரி கணக்குகளை மறு ஆய்வு செய்வதற்கான கால அளவை 6 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டாக குறைக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. தற்போதைய நடைமுறைப்படி முந்தைய 6 நிதியாண்டுகளுக்கான வருமான வரி கணக்குகளை வருமான வரித்துறையினர் மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள வரி ஏய்ப்புகளை பொறுத்தவரை, முந்தைய 4 நிதியாண்டுகளுக்கு வரை கணக்குகள் மறு ஆய்வு செய்யப்படுகின்றன. இதுபோல் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்புகள் இருந்தால் முந்தைய 6 நிதியாண்டுகள் வரை கணக்குகள் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதேநேரத்தில், வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் தொடர்பான வரி ஏய்ப்புகளை பொறுத்தவரை முந்தைய 15 நிதி ஆண்டுக்கான கணக்குகள் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. தற்போது உள்ள நடைமுறைகளால் வழக்குகள் எண்ணிக்கை அதிகமாகிறது. இதை குறைக்க, 4 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குகளை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்ற வரையறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இது நடைமுறைக்கு வந்தால், முந்தைய 4 நிதியாண்டுகளுக்கு மேல் உள்ள கணக்கு விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள முடியாது. அதேநேரத்தில், வரி செலுத்துபவர்கள் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்ய தவறினால், நான்கு ஆண்டுக்கு முந்தைய கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், முந்தைய ஆண்டு கணக்குகளை ஆய்வு செய்யும் வருமான வரித்துறை முடிவுக்கு எதிரான வரி செலுத்துபவர் முறையீடு செய்ய முடியும். முந்தைய நிதியாண்டுகளுக்கான கணக்குகளை மறு ஆய்வுக்கு உட்படுத்துவது நடைமுறையில் பிரச்னைக்கு உரியதாக இருக்கிறது. எனவே ஆய்வுக்கு உட்படுத்தும் கால அளவை குறைத்தால் வழக்குகள் எண்ணிக்கையும். வருமான வரித்துறையினரின் பணிச்சுமையும் குறையும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

Related Stories: