வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர ஜி-20 மாநாட்டின்போது டிரம்ப் - ஜின்பிங் பேச்சு

பீஜிங்: ஜி-20 மாநாட்டின்போது  அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் சீன அதிபர் ஜி  ஜின்பிங் பேச்சுவார்த்தை  நடத்த உள்ளார்.இந்தியா,  அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-20  நாடுகளின் உச்சி மாநாடு, ஜப்பானின் ஒசாகா நகரில் வரும் 28, 29ம் தேதிகளில் நடைபெறுகிறது. அமெரிக்காவில்  இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது சீனா கடந்தாண்டு அதிக வரி விதித்ததால், அமெரிக்காவும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்தது. இதனால், இருநாடுகளுக்கும்  இடையே உலக வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது. இது தவிர,  அமெரிக்காவின் தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றை சீனா  திருடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும், தெற்கு சீன கடல் பகுதியில்  சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கும், அமெரிக்கா கடும்  எதிர்ப்பு  தெரிவித்து வருகிறது. இதனால் சீனா-அமெரிக்கா உறவில் பதற்றம் நிலவுகிறது.

Advertising
Advertising

 இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் சீன அதிபர் ஜி  ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்து வர்த்தகப் போரை  முடிவுக்கு கொண்டு வருவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இது  தொடர்பாக டிரம்ப் தனது டிவிட்டரில், `சீன அதிபருடன் தொலைபேசி மூலம்  நடத்திய பேச்சுவார்த்தை நல்ல முறையில் அமைந்தது. ஜப்பானில் நடைபெறும் ஜி-20  மாநாட்டில் சந்திக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு முன், இரு தரப்பு   அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்,’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல்,  சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறிய போது, ``ஜி-20 மாநாட்டில்  டிரம்பை சந்திக்க தயாராக இருக்கிறேன். அப்போது, இரு நாடுகள் இடையிலான  பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய அடிப்படை பிரச்னைகள் குறித்து  பேச  உள்ளேன். உலகின் மிகப்பெரிய இரண்டு பொருளாதார நாடுகள் ஒத்துழைத்து முன் மாதிரியாக விளங்க  வேண்டும்’’ என்றார்.

Related Stories: