தனிப்பட்ட முறையில் டிரம்ப் கடிதம் அமெரிக்க அதிபரிடமிருந்து நல்ல செய்தி வந்திருக்கிறது: வட கொரிய அதிபர் கிம் தகவல்

சியோல்: ‘அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய தனிப்பட்ட கடிதத்தில் நல்ல செய்தி வந்திருக்கிறது,’ என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே வியட்நாமில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வடகொரியா தனது அணு ஆயுதத்தை முழுமையாக  அழித்தால் மட்டுமே பொருளாதார தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் என அதிபர் டிரம்ப் நிபந்தனை விதித்தார். ஆனால், ‘அணு ஆயுதங்கள் படிப்படியாக மட்டுமே அழிக்கப்படும். அதனால், பொருளாதார தடைகளையும் படிப்படியாக விலக்கிக்  கொள்ள வேண்டும்’ என கிம் கூறினார். இதனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து, இரு தரப்பு உறவில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை நீடிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை ஆரம்பித்து விட்டது. இதனால், வடகொரியா மீண்டும்  பழைய நிலைக்கு சென்று விடுமோ என கொரிய தீபகற்பத்தில் பீதி நிலவுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நல்ல செய்தியை கடிதம் மூலமாக அனுப்பி இருப்பதாக கிம் ஜோங் உன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து வடகொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், டிரம்ப் தனிப்பட்ட  முறையில் அனுப்பிய கடிதத்தில் நல்ல செய்தியை சொல்லி இருப்பதாகவும், அது பற்றி நிச்சயம் பரிசீலனை செய்யப்படும் எனவும் கிம் ஜோங் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளது. ‘டிரம்பின் அசாத்திய தைரியம் பாராட்டுக்குரியது’ என்றும் கிம்  ஜோங் உன் கூறி இருக்கிறார்.

இந்த கடிதம் குறித்து வெள்ளை மாளிகை எந்த தகவலையும் உறுதிபடுத்தவில்லை. ஏற்ெகனவே, டிரம்ப்-கிம் இடையே தனிப்பட்ட முறையில் கடித போக்குவரத்து கடந்த ஓராண்டாக நீடித்து வருகிறது. இம்மாத துவக்கத்தில் கூட டிரம்ப்,  கிம்மிடமிருந்து தனக்கு அழகான கடிதம் வந்திருப்பதாக குறிப்பிட்டார். ஆனால், கடிதத்தில் என்ன தகவல் இருக்கிறது என்பதைப் பற்றி இரு தலைவர்களும் வெளியிடவில்லை.

Related Stories: