×

மத சுதந்திர விவகாரம்: வெளிநாட்டு நிறுவனம் எங்கள் குடிமகன்கள் பற்றி பேசுவதற்கு உரிமை இல்லை...இந்திய வெளியுறவுத்துறை ஆவேசம்

டெல்லி: எங்கள் நாட்டு மத சுதந்திரம் குறித்து கேள்வியெழுப்பவும், உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடவும் எந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், அரசுக்கும் உரிமையில்லை என அமெரிக்காவுக்கு இந்தியா காட்டமான பதில்  அளித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை, 2018-ம் ஆண்டிற்கான சர்வதேச அளவிலான மத சுதந்திரம் என்ற பெயரில் ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் சிறுபான்மையினர் குறிப்பாக  முஸ்லிம்கள், மற்றும் அவர்களை சார்ந்த அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் அந்தஸ்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதக் கலவரங்கள், மத வெறியை ஊக்குவிக்கும் கொலைகள், தாக்குதல்கள் அரங்கேறி வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அடித்துக் கொல்லும் நிகழ்வுகள்  தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிம் பெயரில் இருக்கும் நகரங்கள், தெருக்கள் பெயர்களை மாற்றம் செய்து வரலாற்று இருட்டடிப்பு செய்வதாகவும் அமெரிக்க அறிக்கை விமர்சித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் 18 தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மதபோதகர்களுக்கு எதிராக 300 முதல் 500 வரையிலான தாக்குதல்களை தொண்டு  நிறுவன்கள் ஆவணப்படுத்தி இருப்பதை அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு  இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை ஆவேசமாக பதிலளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ராவேஷ் வெளியிட்ட அறிக்கையில்,  இந்தியா வலிமையான சக்தி மிகுந்த ஜனநாயகத்தன்மையை கொண்டது. இங்கு அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள் அரசால் பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பாக, சிறுபான்மையினரின் நலன்கள் அரசமைப்புச்சட்டத்தால்  பாதுகாக்கப்படுகிறது. மதச்சார்பின்மை கூறுகளால் இந்தியா பெருமைப்படுகிறது.

மிகப் பெரிய ஜனநாயகம் மற்றும் பன்மைவாத சமூகத்தை நீண்ட கால அர்பணிப்பின் மூலம் கொண்டுள்ளோம். இந்திய அரசியல் சாசனம், அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்கிறது. எந்த வெளிநாட்டு அரசும், எங்கள்  நாட்டின் மத சுதந்திரம் குறித்தும், குடிமக்களின் உரிமைகள் குறித்தும் கேள்வியெழுப்ப தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வரும் 25-ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்திய  வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Citizens ,Indian ,Foreign Ministry , Religious Freedom, Foreign Institution, Citizens, Rights, Central Foreign Affairs, Anger
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...