புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்

புனே: புனே மற்றும் ஷீரடியில் நேற்று அதிகாலையில் நடந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் ரூ.50 லட்சத்துடன் இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர். மகாராஷ்டிராவின் புனே அருகே யேவத் என்ற இடத்தில், கடேலா என்ற பகுதியில் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்.பி.ஐ.) சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது.

நேற்று அதிகாலை இந்த மையத்துக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் ஏ.டி.எம். மையத்தின் கதவுகளை உடைத்தனர். பின்னர் உள்ளே இருந்த ஏ.டி.எம் இயந்திரத்தை பெயர்த்தெடுத்து அலேக்காக தூக்கு ஒரு வாகனத்தில் வைத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். நேற்று காலையில்தான் இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் தெரியவந்தது. வங்கி அதிகாரிகளும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். திருடிச் செல்லப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ.30 லட்சம் வரை இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை குறித்து யேவத் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று ஷீரடி அருகிலும் துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்தது. ஷீரடி அருகே சங்கம்நேர் நகரில் புனே-நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தையும் உடைத்து உள்ளே இருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.

அந்த ஏ.டி.எம்.மில் ரூ.20 லட்சம் வரை இருந்ததாக வங்கி அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவம் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, புனே மாவட்ட, வட்காவ் அருகில் உள்ள பான் என்ற இடத்திலும் ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம ஆசாமிகள் உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அப்பகுதி மக்கள் சிலர் உஷாரானதால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

Related Stories: