×

கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் உடைந்த குழாயில் இருந்து 2 மாதமாக வீணாகும் குடிநீர்: அதிகாரிகள் அலட்சியம்

கொள்ளிடம்: நாகை அருகே அதிகாரிகள் அலட்சியம் காரணமாக உடைந்த குழாயில் இருந்து 2 மாதமாக குடிநீர் வீணாகி கொண்டிருக்கிறது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த ஓலையாம்புத்தூர் நடுநிலைப்பள்ளி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் செல்லும் குழாய் செல்கிறது. வடரெங்கத்திலிருந்து கூட்டு குடிநீர்த்திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் சக்தி வாய்ந்த மின்மோட்டார்கள் மூலம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் கடற்கரையோரமுள்ள கிராமங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த குழாய் மூலம் குன்னம், பெரம்பூர், ஓலையாம்புத்தூர், கீழமாத்தூர், அரசூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக எடுத்துச்செல்லப்பட்டு பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்த பிரதான குழாய் ஓலையாம்புத்தூரில் சாலையோரம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் இக்குழாய் மூலம் எப்போதும் வெளியேறிய வண்ணம் இருப்பதால் சேரவேண்டிய உரிய தண்ணீர் கிராமங்களுக்கு போய் சேருவதில் தடை ஏற்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்கள் ஆகியும் இதுவரை சரி செய்யாததால் அதிக அளவு குடிநீர் வீணாகிறது. தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது கண்டனத்துக்குரியது. எனவே, குழாயை சரி செய்து குடிநீரை சேமிக்க அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Heavy famine, drinking water, negligence of officials
× RELATED நாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்