தென்மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் தினசரி மெமு ரயில்கள் இயக்கப்படுமா?.. ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: தென்மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் பயன்பெறும் வகையில் தினசரி மெமு ரயில் இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு குமரி மாவட்ட ரயில் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கொல்லத்துக்கு புதிய மெமு ரயில் 2012 டிசம்பர் முதல் இயக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த ரயில் கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது கன்னியாகுமரி-கொல்லம் ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. வெள்ளிகிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மெமு ரயில் சாதாரண பயணிகள் ரயில்களைவிட வேகமாக இயக்கபடுகிறது. பயணநேரமும் கணிசமாக குறையும்.  மெமு ரயில் பெட்டிகளில் அதிக பயணிகள் பயணிக்க முடியும். கழிப்பட வசதி இருப்பதால் அதிக தூரம் இயக்க முடியும். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மற்ற ரயில்களுக்கு இஞ்சின் மாற்றுவது போன்று இந்த ரயிலுக்கு இஞ்சின் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

2011ம் ஆண்டு பட்ஜெட்டில் 8 மெமு ரயில்கள் அறிவிக்கப்பட்டது. இதில் 3 தினசரி ரயிலாகவும், 5 ரயில்கள் வாரம் ஆறு நாள் ரயிலாகவும் இயக்கப்படுகிறது. அனைத்து ரயில்களையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தினசரி ரயிலாக இயக்க வேண்டும். தமிழக பயணிகள் பயன்படும்படியாக கூடுதல் மெமு ரயில்கள் அறிவித்து இயக்க வேண்டும். 151 கி.மீ. தூரம் இயக்கப்படும் குமரி-கொல்லம் மெமு ரயில் தமிழகத்தில் வெறும் 56 கி.மீ. தூரம் மட்டுமே பயணம் செய்கிறது. ஆகவே தமிழகத்தை சேர்ந்த பயணிகள் பயன்பெறும் வகையில், கொல்லத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக மதுரைக்கும், கொல்லம் - திருநெல்வேலி, கொல்லம் - தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களிலும் மெமு ரயில்களை இயக்க வேண்டும். தற்போது இயங்கும் குமரி-கொல்லம் மெமு ரயிலை நெல்லை, தூத்துக்குடிக்கு அல்லது மதுரை வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

மெமு ரயில்களை பராமரிக்கும் பணிமனை அருகில் இருக்கிறதா? என்று பார்த்தால் கொல்லத்தில் மட்டுமே உள்ளது. இதனால் வாராந்திர பராமரிப்புக்கு கூட கொல்லத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. ஆகவே நெல்லையில் புதிதாக மெமு ரயில்களை பராமரிக்கும் பணிமனை அமைத்தால் தென்மாவட்டங்களில் உள்ள படித்த வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரயில்வேயில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதும் ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பு.

Related Stories: