நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில்பாதை பணிகள் விறுவிறு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்தாமரைகுளம்: நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே நடக்கும் இரட்டை ரயில்பாதை பணிக்கான வேலைகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. நாட்டின்  போக்குவரத்தில் மிகமுக்கிய பங்கை ஆற்றுவது ரயில்வே நிர்வாகம் எனலாம்.  தினமும் பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு  பெரும் சேவை புரிகிறது. என்ன தான் அரசு ேபருந்துகளின் எண்ணிக்கையை  பெருக்கினாலும், ரயில்களின் பங்களிப்பின்றி போக்குவரத்து பிரச்னையை தீர்க்க முடியாது என்பதில் ஐயமில்லை. குமரி  மாவட்டத்தை பொறுத்தவரை ரயில்களின் பயன்பாடு தினம் தினம் அதிகரித்து  வருகிறது. குறிப்பாக இங்குள்ள மக்கள் சென்னை மற்றும் வடமாநில  பயணத்திற்கும், திருப்பதி, ராமேஸ்வரம், குருவாயூர் உள்ளிட்ட ஆன்மீக  தலங்களுக்கு செல்வதற்கும் ரயில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அந்த வகையில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுஇரட்டை ரயில் பாதை  அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாகர்கோவில்-  கன்னியாகுமரி பாதையில் இந்த பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. இந்த  பணியின்போது ஆறுகள், குளங்கள், கால்வாய்களில் இருந்து  விவசாய நிலங்களுக்கு  சென்று சேரும் தண்ணீரை முறைப்படி கொண்டு செல்ல வசதியாக காங்கிரீட் பாலம்  அமைக்கப்படுகிறது. வடக்குதாமரைகுளம் பழையாறு செல்லும் பகுதியில் பல்வேறு  சிரமங்கள் இருந்தும், அதனை சாதுர்யமாக திட்டமிட்டு சிறப்பாக பணிகள்  செய்யப்படுகிறது. மேலும் பணிகளை துரிதமாக முடிக்கும் வகையில்  தாமரைகுளம் ரயில் நிலையம்  அருகே புதிய தண்டவாளங்கள் அமைப்பதற்காக ராட்சத  இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெய்னர்கள் மூலமாக கொண்டு வந்து  குவித்து வைத்துள்ளனர்.

இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு-பகல்  பாராமல் பணியாற்றி வருகின்றனர். ரயில்வே கோட்ட உயர் அதிகாரிகளும் பணிகளை விரைவாக முடிக்கும் வகையில் பணிகளை கண்காணித்து வருகின்றனர். இந்த  பணிகளை தினமும் ஏராளமான பொது மக்கள் சென்று ஆர்வமுடன் பார்த்து  வருகின்றனர். இரட்டை ரயில்பாதை வருவதால் குமரி மாவட்ட மக்கள்  மட்டுமல்லாமல், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வந்து திரும்புகின்ற வடமாநில  சுற்றுலா பயணிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: