×

குழாய் உடைப்பால் திருமங்கலத்தில் வீணான வைகை குடிநீர்: மக்கள் அதிர்ச்சி

திருமங்கலம்: காவிரி கூட்டுக்குடிநீர் நிறுத்தப்பட்டதால் அவசரத்திற்கு திறக்கப்பட்ட வைகை கூட்டுக்குடிநீர் திட்ட பைப்லைன் உடைந்ததால் குடிநீர் வீணானது. இதனால் திருமங்கலம் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமங்கலம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் திருமங்கலம் நகராட்சிக்கு தினமும் 33 லட்சம் லிட்டர், ஒன்றியத்திற்கு 30 லட்சம் லிட்டர் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் திருமங்கலம் நகராட்சியில் ஏற்கனவே உள்ள  வைகை கூட்டுக்குடிநீர் திட்டம், காவிரியால் தற்காலிகமாக பம்பிங் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
 
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைக்கும் பணிக்காக தோண்டியபோது மதுரை மாவட்டம் மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட நகராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும் பைப்லைன் உடைந்தது. இதனால் நேற்று முன்தினம் முதல் திருமங்கலம் நகரில் காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் மற்றொரு திட்டமான வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பம்பிங் செய்து திருமங்கலம் நகருக்கு நகராட்சி தண்ணீர் கொண்டு வந்தது. நேற்று முன்தினம் முழுவதும் வைகையிலிருந்து திருமங்கலம் நகருக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு நேற்று காலை வழக்கம்போல் விநியோகிக்கப்பட்டது. கடந்த நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டு திடீரென  திறக்கப்பட்டதால் அதிக அழுத்தம் காரணமாக சோழவந்தான்-திருமங்கலம் இடையே பைப்லைன்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டது.

திருமங்கலம் அருகே வாகைக்குளம் பிரிவில் குழாய் உடைந்து வைகை குடிநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. பெருக்கெடுத்து ஓடிய குடிநீர் இந்த பகுதியிலுள்ள வீடுகளை சுற்றி குளம் போல் தேங்கவே பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதை கண்ட மக்கள் குடங்களில் பிடித்து சென்றனர். தகவல் அறிந்த நகராட்சி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் பம்பிங் செய்யும் பணிகளை நிறுத்தினர்.
இதுகுறித்து நகராட்சி பொறியாளர் சக்திவேலுவிடம் கேட்ட போது, ‘காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகம் தடைப்பட்டதால் வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

எதிர்பாராவிதமாக பைப்லைன் உடைந்துவிட்டது. நேற்று நகருக்கு வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவிட்டது. பைப்லைன் உடைந்த பகுதியில் மராமத்து பணி துவக்கப்பட்டுள்ளது. உடைப்பை சரி செய்து தண்ணீர் விநியோகிக்கப்படும்’ என்றார். பல இடங்களில் தண்ணீருக்காக மக்கள் போராடி வரும் நிலையில், திருமங்கலம் பகுதியில் குழாய் உடைந்து வைகை குடிநீர் வீணானது மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.


Tags : Tirumangalam , Pipe, Thirumangalam, waste water, people shock
× RELATED தண்ணீர் தொட்டியில் விழுந்த மயில் மீட்பு