சிவகங்கை அருகே அவலம்: தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் மக்கள்... பேரூராட்சி நிர்வாகம் கொர்ர்ர்...

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பேரூராட்சில் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் உள்ள 12வார்டுகளில் சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவ்வூருக்கு சிவகங்கை அருகே உள்ள பையூரில் இருந்து பையூர் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. பையூரிலிருந்து நாட்டரசன்கோட்டைக்கு சுமார் ஆறு கி.மீ தூரம் பைப் லைன் அமைக்கப்பட்டு நாட்டரசன்கோட்டையில் உள்ள தண்ணீர் டேங்கில் நிரப்பப்பட்டு குடிநீர் தினமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. பைப் லைனில் ஏற்பட்ட சேதம் மற்றும் குடிநீரின் தன்மை மாறியதால் கடந்த பல ஆண்டுகளாக இந்த குடிநீர் நாட்டரசன்கோட்டைக்கு வருவதில்லை. தற்போது இந்த திட்டம் பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் பேரூராட்சி பகுதியில் போடப்பட்ட சிறிய அளவிலான போர் மூலம் வரும் நீரை பொதுமக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்த நீர் காலை நேரங்களில் சில மணி நேரம் மட்டும் வழங்கப்படும்.

ஆனால் இந்த நீர் மிகக்குறைவான அளவே வருவதால் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கண்ணுடையநாயகி அம்மன் கோவில் எதிர்ப்புறம் உபகரணங்கள் அமைக்கப்பட்டது. இதில் காலை நேரத்தில் மட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இங்கு குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. தெருக்களில் அமைக்கப்பட்டு சிறிய அளவிலான சின்டடெக்ஸ் தொட்டிகளுக்கான போர்வெல்களில் சுமார் 20க்கும் மேற்பட்டவைகளில் நீர் இல்லை. இதனால் பேரூராட்சி பகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,‘‘ஆண்டு முழுவதும் தெப்பக்குளத்தில் உள்ள நீரையே குடிநீராக பயன்படுத்துவோம். கடந்த மூன்று மாதங்களாக குளத்தில் முற்றிலும் நீர் இல்லாமல் போனது. பேரூராட்சிக்கென தனியாக குடிநீர் திட்டம் இல்லாமல் போனதே குடிநீர் தட்டுப்பாட்டிற்கு காரணம். மழைக்காலம் வரும் வரை லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டரசன்கோட்டைக்கு தனியாக குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும். காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லைன்கள் இவ்வழியே செல்வதால் இத்திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: