சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மேலும் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதன்காரணமாக ஐடி நிறுவனங்கள் சில தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தியிருந்தனர். மேலும் சென்னையில் சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், குடிநீர் லாரிகளின் சேவை சென்னையில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளில் இருந்து குடிநீர் லாரிகள் தண்ணீரை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கலில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து வருவதாக இளையராஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், பல தனியார் நிறுவனங்கள் அரசின் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்துவருவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீ்ர் பஞ்சம் அதிகமாகி வருவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். எனவே, சட்டவிரோதமாக நீரை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணி பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி குடிநீர் வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related Stories: