196 நாட்களுக்கு பிறகு சென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்... மழையால் மக்கள் மகிழ்ச்சி..!

சென்னை: சென்னையில் 196 நாட்களுக்கு பிறகு மிதமான மழை பெய்து வருகிறது. கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில  வாரங்களாக சென்னையில் கோடை வெயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் இந்த வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், நாகர்கோவில் உள்ளிட்ட நகர் பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் தெருத்தெருவாக அலையும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதும் வீடுகளுக்கே கார்ப்பரேஷன் தண்ணீர் குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது, தண்ணீர் இல்லாததால் அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜுன் 1-ம் தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதனையடுத்து கேரளாவில் தொடங்கியது. ஆனாலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான பகுதிகளில் மழை பெய்யாமல் இருந்தது.

மழை பெய்ய வேண்டும் என்று மக்கள் காத்திருந்த நிலையில் சென்னையில் 196 நாட்களுக்கு பிறகு மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக பூவிந்தமல்லி, நசரத்பேட்டை, திருமழிசை, குமணன்சாவடி, போரூர், வேளச்சேரி, தரமணி, செம்மஞ்சேரி, கிண்டி மீனம்பாக்கம், பல்லாவரம், பம்பல், குரோம்பேட்டை, தாம்பரம், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில், உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories: