ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு: அமுதா உள்ளிட்ட 11 பேருக்கு ஜூலை 4ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா உள்ளிட்ட 11 பேருக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 4ம் தேதி வரை காவலை நீட்டித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பேரம் பேசி குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

இந்த வழக்கில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், நந்தகுமார், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி செவிலியர் பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியாளர் சாந்தி, பெங்களூரு அழகுகலை நிபுணர் ரேகா மற்றும் இடைத்தரகர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி என 11 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, இவர்களின் நீதிமன்ற காவல் கடந்த 6ம் தேதியோடு முடிவடைந்த நிலையில், 11 பேரையும் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அமுதவள்ளி உள்பட 11 பேரின் நீதிமன்ற காவலை வருகிற 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, நீதிமன்ற காவல் இன்றோடு முடிந்த நிலையில், 11 பேரும் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களின் காவலை ஜூலை 4ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: