ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் தகவல்

ஈரான்: ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்கவின் RQ-4 Global Hawk என்ற ஆளில்லா விமானத்தை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்நிலையில், ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்க ராணுவம் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா பல்வேறு வகைகளில் ஈரானுக்கு பொருளாதார நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், அணுசக்தி ஒப்பந்தத்தை மீற போவதாக அறிவித்திருந்தது. அமெரிக்கா, ஈரான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு ஆசியாவில் கூடுதல் படைகளை அமெரிக்கா இறக்கி வருகிறது. ஈரான் மீது பொருளாதார தடைகள் தொடர்வதால் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் 10 நாட்களுக்குள் தொடங்கும் என்று ஈரான் பகீரங்கமாக அறிவித்துள்ளது. இதனால் அணு ஆயுதங்களை ஈரான் தயாரிக்கும் என்று உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

இதனிடையே ஓமான் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில், ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா சேதப்படுத்துவதாக இருநாடுகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் எந்த நேரத்திலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்றும் தகவல்களும் கூறப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் கூடுதலாக 1,000 வீர்ரகளை அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. மேலும் இன்று ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பகுதிக்குள் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் பறந்ததாக கூறப்படுகிறது. அந்த விமானத்தை ஈரான் காவல்படை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இது தொடர்பாக பதில் எதுவும் கூற முடியாது என்று அமெரிக்க ராணுவம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

Tags : military ,airspace ,US ,Iran , Iran, airspace, US, unmanned aircraft
× RELATED சிரியாவில் பதுங்கி இருந்த வீட்டை...